செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 18 ஜூன் 2024 (07:37 IST)

பரோலில் வந்த ரெளடி திடீரென குடும்பத்துடன் தலைமறைவு.. அதிர்ச்சியில் காவல்துறை..!

பரோலில் வெளிவந்த ரெளடி குடும்பத்துடன் திடீரென தலைமறைவாகிவிட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுவை முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கர்ணா கடந்த 1997 ஆம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 99 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். இந்த நிலையில் பல ஆண்டுகள் சிறையில் இருந்ததால் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்ய அவர் கோரிய நிலையில் அவரது கோரிக்கையை புதுவை அரசு நிராகரித்தது.

இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு அவர் செய்துள்ளார் என்பதும் விரைவில் இந்த வழக்கும் தீர்ப்பு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் அவர் முப்பதுக்கு மேற்பட்ட முறை பரோலில் வந்துள்ள நிலையில் சமீபத்தில் அவர் தனது மனைவிக்கு உடல் நலம் சரியில்லாததால் மூன்று நாட்கள் பரோலில் வெளி வந்தார்.

அப்போது அவர் பரோல் முடிந்து சிறைக்கு திரும்பாததை அடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் கர்ணா வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவரது வீடு பூட்டி இருந்தது .அக்கம்பக்கத்தில் விசாரித்த போது அவருடைய மனைவி  மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. அது மட்டும் இன்றி கர்ணா தனது வீட்டை 48 லட்சத்துக்கு வங்கி ஒன்றில் அடமானம் வைத்து அந்த பணத்தையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva