சாலையோரம் நின்று மிரட்டும் ஆண் யானை கொம்பன்: பீதியடையும் மக்கள்

Suresh| Last Modified வியாழன், 1 ஜனவரி 2015 (12:25 IST)
பவானிசாகர் வனப் பகுதியில் மேட்டுப்பாளையம் ரோட்டில் ஆங்காங்கே நின்று கொண்டு ஆண் யானை அந்த வழியாக செல்பவர்களை மிரட்டுவதால் பயணிகள் பீதியடைந்துள்ளனர்.


 
ஈரோடு வனமண்டலம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்டது பவானிசாகர் வனப்பகுதி. இங்கு காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக வசித்து வருகிறது.
 
இந்த யானைகள் வனப் பகுதிக்குள் இருக்கும் வரை வனத் துறைக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இருந்தது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன் இப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி வனப் பகுதிக்குள் வசித்த காட்டு யானைகளுக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
 
வனப்பகுதி வறண்டு போனதாலும் அங்கு இருந்த குளம், குட்டைகள் காய்ந்து போனதாலும் இப்பகுதியில் இருந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராம பகுதிக்கு படையெடுக்க தொடங்கியது.
 
விவசாய பயிர்களை நாசம் செய்த யானைகள் சிலரை மிதித்து கொன்ற சம்பவமும் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன் பெய்த கனமழையின் காரணமாக வனப் பகுதி வளம்பெற்றது.
 
குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பியது. இதனால் வெளியே வந்த யானை கூட்டம் மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றது. ஆனால் பவானிசாகர் பகுதியில் கொம்பன் மட்டும் அவ்வப்போது ரோட்டின் ஓரத்தில் நின்று இந்த வழியாக செல்லும் பயணிகளை மிரட்டுவது வாடிக்கையாகிவிட்டது.
 
சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ரோட்டில் நால்ரோட்டில் இருந்து கள்ளிப்பட்டி பிரிவு வரை எந்த இடத்திலும் இந்த கொம்பன் நிற்பான் என்று சொல்லமுடியாது.
 
வனத்துறையினர் இந்த கொம்பனை வனப் பகுதிக்குள் விரட்டினாலும் அவ்வப்போது ரோட்டில் வந்து நின்று பொதுமக்களை மிரட்டி வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் பீதியடைந்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :