1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 5 ஏப்ரல் 2017 (10:20 IST)

ஆர்கே நகர் வேற லெவல்: ஓடும் பஸ்ஸில் நடத்துனரே பணப்பட்டுவாடா!

ஆர்கே நகர் வேற லெவல்: ஓடும் பஸ்ஸில் நடத்துனரே பணப்பட்டுவாடா!

தமிழகத்தில் திருமங்கலம் ஃபார்முலா மிகவும் பிரசித்திபெற்ற ஒன்று. ஆனால் தற்போது அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஆர்கே நகர் ஃபார்முலா உருவாகியுள்ளது. ஆர்கே நகரில் வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.


 
 
இதனையடுத்து அரசியல் கட்சிகள் பணத்தை தண்ணீரை போல வாரி இறைத்து வருகின்றனர். அதிலும் முக்கியமாக அதிமுக அம்மா அணியை சேர்ந்த டிடிவி தினகரன் மீது அனைத்து கட்சியினரும் பணப்பட்டுவாட தொடர்பாக புகார் அளித்து வருகின்றனர்.
 
ஏற்கனவே அவரது ஆதரவாளர்கள் 3 பேர் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பணப்பட்டுவாடா தொடர்பாக பயன்படுத்தப்படும் அனைத்து ஃபார்முலாக்களையும் மிஞ்சும் வகையில் ஓடும் பஸ்ஸில் நடத்துனர் மூலமாக பணப்பட்டுவாடா செய்து ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கியுள்ளனர்.
 
நேற்று இரவு தண்டையார் பேட்டைக்கு சென்ற 44சி வழித்தடம் கொண்ட பேருந்தில் பணப்பட்டுவாடா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை பேருந்தின் நடத்துனரே செய்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனை அறிந்த திமுகவினர் இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
 
இந்த புகாரை அடுத்து அந்த பேருந்தின் நடத்துனர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார். இதில் அவரிடம் இருந்து புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் 2 லட்சம் மதிப்பில் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் பணப்பட்டுவாடாவுக்கு பயன்படுத்தப்பட்ட அந்த பேருந்தும் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.