ஆர்கே நகர் தேர்தல் எப்போது?: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
ஆர்கே நகர் தேர்தல் எப்போது?: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெற இருந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலை பணப்பட்டுவாடா காரணமாக இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதனையடுத்து இந்த தொகுதிக்கான தேர்தல் எப்பொழுது நடைபெறும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்ததை அடுத்து அவரது ஆர்கே நகர் தொகுதி காலியானது. இதனையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மிகவும் முக்கியமான இந்த தேர்தலில் அதிமுக சசிகலா அணி சார்பாக டிடிவி தினகரன், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உள்ளிட்ட 62 வேட்பாளர்கள் களத்தில் இறங்கினர்.
இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்ததையடுத்து தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை ரத்து செய்தது. இதனையடுத்து இந்த தேர்தல் மீண்டும் எப்பொழுது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
ஒரு தொகுதி காலியாகி 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஜெயலலிதா இறந்து நேற்றுடன் 6 மாதம் ஆனது. இந்நிலையில் ஆர்கே நகர் தேர்தல் எப்பொழுது நடத்தப்படும் என்ற விளக்கத்தை தேர்தல் ஆணையம் அளித்துள்ளது.
அதில், ஆர்கே நகரில் சுதந்திரமாக தேர்தல் நடத்தும் சூழல் உருவாகும் வரை அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட மாட்டாது என விளக்கம் அளித்துள்ளது. சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே தேர்தல் நடத்தப்படும் என கூறியுள்ளது தேர்தல் ஆணையம்.