ரேலா மருத்துவமனையில் 42 வயதான குஜராத்தி பெண்மணிக்கு வெற்றிகரமான இரட்டை நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை.
உறுப்புமாற்று சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற ரேலா மருத்துவமனை, நுரையீரல் உறுப்பிடை நார்த்திசு (ILD) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்த திருமதி. திம்பால் ஷா என்ற குஜராத்தைச் சேர்ந்த 42 வயது பெண்மணிக்கு அதிக சிக்கலான இரட்டை நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது ILD என்பது, நுரையீரலில் உள்ள மிகச்சிறிய காற்றுப்பைகளை பாதித்து, சுவாசிப்பதை அடிக்கடி கடும் சிரமமானதாக மாற்றக்கூடியதாகும்.
திடீரென ஏற்பட்ட இவரது நோய்க்கும், புறாக்களுக்கும் தொடர்பு இருப்பதாக அறியப்படுகிறது. நார்த்திசு நுரையீரல் நோய் இவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. புறாக்களின் கழிவுகள், எச்சங்களினால் ஏற்படுகின்ற புறா வளர்ப்பவர்களின் நுரையீரல் நோய் அல்லது மிகைஉணர்திறன் மூச்சுப்பை அழற்சி எனவும் இந்நோய் சில நேரங்களில் அழைக்கப்படுகிறது. திருமதி. ஷா கடந்து வந்த இப்பாதையில் எண்ணற்ற தடைகளும், சவால்களும் இருந்தபோதிலும் விடாப்பிடியான மனஉறுதியும் கலந்திருந்தன. கடும் சவாலான நோய் பாதிப்பிலிருந்து இப்பெண்மணி விடுபட்டிருக்கும் இந்நிகழ்வானது, மேம்பட்ட மருத்துவ அறிவு மற்றும் உறுப்புதானத்தின் அற்புதமான தாக்கத்திற்கு சிறப்பான எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இதேபோன்ற கடுமையான உடல்நல சவால்களால் அவதியுறும் நபர்களுக்கு இப்பெண்ணின் வாழ்க்கை கதை, நம்பிக்கையை வழங்கும் ஒளிதீபமாக ஒளிர்கிறது.
சுவாசிப்பதில் தொடர்ந்து இருந்து வந்த பிரச்சனை, பல்வேறு மருத்துவர்களோடு ஆலோசனை மற்றும் சந்திப்புகள், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் என, நுரையீரல் இடைத்திசு நோயால் அவதிப்பட்ட திரு. திம்பால் ஷா – ன் வாழ்க்கை மிக சிரமமானதாகவே தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. வலுவான மனஉறுதி அப்பெண்ணுக்கு இருந்த போதிலும் கூட, மருத்துவ சிகிச்சையானது, குறுகிய கால நிவாரணத்தையே அவருக்கு வழங்க முடிந்தது. இதனால், நுரையீரல் செயலிழப்பு என்ற அச்சுறுத்தும் ஆபத்து தென்படத் தொடங்கியது. இளமையின் தீவிரத்தை உணர்ந்த திருமதி. ஷா மற்றும் அவரது குடும்பத்தினர், சென்னையிலுள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சையை நாடி வந்தனர். இவரது சிகிச்சைக்கான செலவுகளுக்கு கிரவுட்ஃபண்டிங் பரப்புரை வழியாகவும், அரசு மற்றும் ரேலா மருத்துவமனை வழங்கிய ஆதரவின் வழியாகவும் நிதி திரட்டப்பட்டது.
விரிவான மதிப்பாய்விற்குப் பிறகு இப்பெண்ணுக்கு இருபக்க நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சையை செய்ய ரேலா மருத்துவர்கள் குழு முடிவு செய்தது. இவருக்கு பொருத்தமான ஜோடி நுரையீரல்களுக்காக மாநிலத்தின் உறுப்புமாற்று பதிவகத்தில் இவர் பதிவு செய்யப்பட்டார். மூளைச் சாவடைந்ததாக அறிவிக்கப்பட்ட 19 வயதான ஒரு இளம் பெண்ணின் ஆரோக்கியமான ஒரு ஜோடி நுரையீரல்களை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் தியாக மனதுடன் முன்வந்தனர். இந்த உறுப்புதானமே திருமதி. ஷாவுக்கு வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்க உதவியிருக்கிறது. ஒரு வருட காலமாக உறுப்பு தானத்திற்காக காத்திருந்த சோதனையான காலத்தில் பல கடுமையான நோய் விளைவுகளை திருமதி. ஷா எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நீண்டகாலம் எதிர்பார்க்கப்பட்ட அழைப்பு, இறுதியில் உறுப்புதானம் பற்றிய செய்தியினை இவருக்கு வழங்கியது.
இந்த அறுவைசிகிச்சை, சிக்கலான செயல்முறைகள் நிறைந்தது; இதற்கு துல்லியமும், மேம்பட்ட திறனும் அவசியம். இப்பெண்ணுக்கு செய்யப்பட்ட வெற்றிகரமான உறுப்புமாற்று சிகிச்சையானது, உறுப்புதானம் அளித்தவர், மற்றும் பெற்றவரது குடும்பங்களது கூட்டுமுயற்சிகள், உறுப்புமாற்று சிகிச்சை குறித்த ஆராய்ச்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் சிகிச்சையை சிறப்பாக ஏதுவாக்குகின்ற லாஜிஸ்டிக்ஸ் உதவி ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சையில் உலகளவில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருப்பது, உறுப்புமாற்று சிகிச்சையை ஊக்குவிப்பதில் இந்நாடு கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்துகிறது.
ரேலா மருத்துவமனையின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் பேராசிரியர் முகமது ரேலா இது தொடர்பாக கூறியதாவது: “ரேலா மருத்துவமனையில் திரு. திம்பால் ஷா – க்கு செய்யப்பட்டிருக்கும் வெற்றிகரமான இரட்டை நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை, நோயாளிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் ஆகிய இருதரப்பினரின் தளராத மனஉறுதிக்கும், மற்றும் மருத்துவர்களின் நிபுணத்துவத்திற்கும் சாட்சியமாக இருக்கிறது. கடுமையான சோதனையும், சோகமும் எதிர்கொள்கின்ற போதிலும் உறுப்புதானம் என்ற தன்னலமற்ற தியாகம், இருள் சூழ்ந்த சூழ்நிலைகளிலும் கூட நம்பிக்கை தீபத்தை ஏற்றி வாழ்க்கைக்கு புத்துயிரை வழங்கியிருக்கிறது என்பது நாம் அனைவரும் நினைவில் நிறுத்தவேண்டிய அம்சமாகும்.”
“தூய்மையான சுற்றுச்சூழலை நாம் பராமரிப்பது முக்கியம். பல ஆண்டுகளாக பறவைகளின் கழிவுகள், எச்சங்கள், தூசி மற்றும் சிறகுகளுக்கு வெளிப்படும் நபர்களுக்கு சரிசெய்ய இயலாத நுரையீரல் சேதம், மிகை உணர்திறன் மூச்சுப்பை அழற்சி மற்றும் நாட்பட்ட சுவாசப்பாதை செயலிழப்பு ஆகியவை ஏற்படக்கூடும்.” என்று அவர் மேலும் கூறினார்.
ரேலா மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை துறையின் கிளினிக்கல் லீட் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர். ஆர். மோகன் பேசுகையில், “வழக்கமான மருந்துகளும், சிகிச்சை முறைகளும் இனிமேலும் பயனளிக்காத கடும் பாதிப்பு நிலையை திருமதி. ஷா – ன் உடல்நிலை எட்டியிருந்தது. உடலிலிருந்து கரியமில வாயுவை அகற்றுவதில் அப்பெண்ணின் நுரையீரல்கள் கடும் சிரமப்பட்டதன் காரணமாக, உறுப்புமாற்று சிகிச்சையை இவருக்கு உடனடியாக செய்வது அவசியமாக இருந்தது.” என்று விளக்கமளித்தார்.
இந்த அறுவைசிகிச்சையை செய்து முடிப்பதற்கு 8 மணி நேரங்கள் ஆகின. அறுவைசிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் வல்லுனர்கள், இரத்தம் / மருந்து உட்செலுத்தல் நிபுணர்கள் மற்றும் அறுவைசிகிச்சை உதவியாளர்கள் உட்பட, 14 மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு இந்த அறுவைசிகிச்சையை மேற்கொண்டது. “இந்த அறுவைசிகிச்சையின்போது திருமதி. ஷா – ன் இரு நுரையீரல்களும் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக தானமளித்த நபரின் ஆரோக்கியமான நுரையீரல்கள் பொருத்தப்பட்டன. இரத்த இழப்பை குறைப்பதற்கு ஒரு தனித்துவமான அணுகுமுறையையும், உத்தியையும் நாங்கள் பயன்படுத்தினோம். அப்பெண்ணின் இதயம் மற்றும் நுரையீரல்களின் இயக்கத்திற்கு சிகிச்சையின்போது வெளியார்ந்த உதவியை நாங்கள் வழங்கினோம்.” என்று இதய உறுப்புமாற்று அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர். பிரேம் ஆனந்த் ஜான் குறிப்பிட்டார்.
உணர்விழப்பு மருந்து தீவிர சிகிச்சை பராமரிப்பை நிர்வகித்த டாக்டர். சரண்யா குமார் பேசுகையில், “திருமதி. ஷா – ன் தீவிர பாதிப்பு நிலையின் இயல்பு காரணமாக அவருக்குப் பொருத்தமான நுரையீரல்களை வழங்கும் தானமளிப்பவரை கண்டறிவது ஒரு சவாலாகவே இருக்கிறது. பொருத்தமான தானமளிப்பவருக்காக எட்டுமாத காலம் இப்பெண்மணி காத்திருக்க வேண்டியிருந்தது.” என்று குறிப்பிட்டார்.
தனது மனமார்ந்த நன்றியை வெளிப்படுத்திய திருமதி. திம்பால் ஷா, “வாழ்க்கையை எனக்கு திரும்பவும் தந்திருப்பதற்காக நான் என்றும் நன்றியுள்ளவராக இருப்பேன். எனக்கு செய்யப்பட்ட இந்த அறுவைசிகிச்சை, வெற்றிகரமாக அமைந்ததால் ஒவ்வொரு நாளும் படிப்படியாக நான் வலுப்பெற்று வருகிறேன். முழுமையாக குணமடைந்ததற்குப் பிறகு ஏறக்குறைய ஒரு இயல்பு வாழ்க்கையை வாழத்தொடங்கும் நாளுக்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன்.” என்று கூறினார்.
பாதிப்பிற்கு ஆளாகியிருந்த நோயெதிர்ப்பு திறனின் காரணமாக தொற்றுக்கான இடர்வாய்ப்பை குறைப்பதற்கும் மற்றும் தொடர்ந்து நடைபெற்று வரும் அவரது சிகிச்சையின் ஒரு பகுதியாக புதிய நுரையீரல்கள் நிராகரிக்கப்படுவதை தடுக்கவும் திருமதி. ஷா தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்வது அவசியம்.