1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (16:18 IST)

லைட்டை ஆஃப் பண்ணுவோம்.. திருடுன பணத்தை வெச்சுடுங்க! – ஊர் முடிவுக்கு கட்டுப்பட்ட ரகசிய திருடர்கள்!

Theft things
மதுரையில் ஒரு வீட்டில் பணம், நகை திருடு போன நிலையில் ஊர் கூட்டத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டு திருடர்கள் மீண்டும் பணம், பொருட்களை வீட்டு வாசலில் விட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.



சில படங்களில் பொருள் ஏதாவது திருடு போனால் லைட்டை ஆஃப் செய்துவிட்டு அந்த பொருளை வைக்க சொல்வது போலவும், ஆனால் திருடனோ லைட் ஆஃப் ஆகும் சமயத்தில் மேலும் சில பொருட்களை திருடி சென்று விடுவது போலவும் நகைச்சுவை காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால் நகைச்சுவையை தாண்டி அவ்வாறான அறிவிப்புக்கு மதிப்பு கொடுத்து உண்மையாகவே திருடிய பொருட்களை விட்டு சென்றுள்ளனர் மதுரையை சேர்ந்த ரகசிய திருடர்கள்.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள கள்ளிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது வீட்டில் கடந்த வாரம் சில திருடர்கள் புகுந்து பீரோவை உடைத்து 15 சவரன் தங்க நகைகள், ரூ.4.40 லட்சம் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் கள்ளிக்குடி கிராமத்தில் பொதுமக்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது.

அதில் பணம், நகையை எடுத்தவர்கள் மீண்டும் அவற்றை கண்ணன் வீட்டின் முன் திரும்ப வைக்க வேண்டும் என்றும், இதற்காக இரவு அக்கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இன்று காலை கண்ணனின் வீட்டு முன்னர் திருடப்பட்ட பணம், நகையை திருடர்கள் விட்டு சென்றுள்ளனர். பொருள், பணத்தை வைத்து சென்ற ரகசிய திருடர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊர் முடிவுக்கு கட்டுப்பட்டு திருடர்கள் செயல்பட்ட விதம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

Edit by Prasanth.K