1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2017 (09:54 IST)

அதட்டிய கவர்னர் : அதிகாலையில் இறங்கிய போலீசார் - பரபரப்பு பின்னணி

தமிழக பொறுப்பு ஆளுநர் மற்றும் மத்திய அரசின் நெருக்கடியை தொடர்ந்தே, சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் தொடர்ந்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.


 

 
ஜல்லிகட்டுக்கு அனுமதி வேண்டும் என மதுரை அலங்காநல்லூர், சென்னை, கோவை, திருச்சி, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த 15ம் தேதி போராட்டத்தை துவக்கினர். 
 
அந்நிலையில், கடந்த 23ம் தேதி அதிகாலை  சென்னை, மதுரை உட்பட போராட்டம் நடைபெறும் அனைத்து இடங்களில் இருந்தும், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். போராட்டத்தின் முக்கிய களமாக திகழ்ந்த சென்னை மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லத்திற்கு எதிராக கூடியிருந்த லட்சக்கணக்கான போராட்டக்காரர்களில், பெரும்பாலானோர் போலீசாரின் கோரிக்கையை ஏற்று நேற்று அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டனர்.  


 

 
ஆனால், ஜல்லிக்கட்டு நிரந்தரம் என்பது உறுதியாகும் வரை இங்கிருந்து செல்லமாட்டோம் என ஏராளமான இளைஞர்கள், அங்கிருந்து போராட்டத்தை தொடர்ந்தனர். அதில் சிலரை குண்டு கட்டாக போலீசார் வெளியேற்ற முயன்றனர். அந்நிலையில், இது கேள்விப்பட்டு கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேனி, பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்த மீனவ மக்கள், இளைஞர்களுக்கு ஆதரவாக மெரினா வந்தனர். 
 
எனவே, அவர்களை கடற்கரைக்கு வரவிடாமல் போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் எழுந்தது. போராட்டம் கலவரமாக மாறியது. ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. அதன்பின் வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் கலவரம் வெடித்தது. அதன்பின், மெரினா போராட்டக்காரர்கள் கடந்த 25ம் தேதி தங்கள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்பினர். தற்போது சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.


 

 
அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு, அலங்காநல்லூரில் ஜல்லிகட்டு நடத்திவிட்டால், போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என முதல்வர் ஓ.பி.எஸ் நினைத்துள்ளார். ஆனால், அங்கே ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் முதல்வர் சென்னை திரும்பினார். இந்நிலையில், ஒரு வார கால போராட்டத்தை அடக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என ஆளுநர் வித்யாசாகர் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
மேலும், ஜல்லிக்கட்டிற்கு எதிரான போராட்டத்தை மத்திய அரசும் விரும்பவில்லையாம். ஏனெனில், மத்திய அரசுக்கு உளவுத்துறை அனுப்பிய அறிக்கையில் “போராட்டக்காரர்கள் பிரதம் மோடியை கடுமையாக விமர்சிக்கின்றனர். மிக மோசமாக திட்டுகிறார்கள். போராட்டத்திற்குள் மாவோயிஸ்டுகள் புகுந்து விட்டனர். தனித் தமிழ்நாடு கேட்கின்றனர்” என கூறப்பட்டது. எனவே இது தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டது. 


 

 
கடந்த 23ம் தேதி காலை சட்டமன்றத்தில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையாற்ற வேண்டியிருந்தது. எனவே, அதற்குள் போராட்டத்தை கலையுங்கள் என உத்தரவு வந்துள்ளது. எனவேதான், போராட்டத்தை கலைக்க போலீசார் தீவிரமாக செயல்பட்டுள்ளனர்” என்ற செய்தி வெளியாகியுள்ளது.