ராம்குமார் மரணம்: பிலால் சித்திக் என்ன சொல்கிறார்!
ராம்குமார் மரணம்: பிலால் சித்திக் என்ன சொல்கிறார்!
சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்படும் முன்னரே அதிகம் பேசப்பட்ட நபர் முகமது பிலால் சித்திக் என்னும் சுவாதியின் நண்பர். இவர் தான் கொலை செய்ததாக சிலரால் சமூக ஊடகங்களில் முதலில் பரப்பப்பட்டது. அதன் பின்னர் தான் ராம்குமார் கைது செய்யப்பட்டு சுவாதியை கொன்றவர் இவர் தான் என குற்றம் சுமத்தப்பட்டார்.
காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் பிலால் சித்திக்கும் இருந்தார். சுவாதி கொலை குறித்து பல்வேறு முக்கிய தகவல்களை இவர் கூறினார் என செய்திகளில் படித்தோம்.
ராம்குமாரையும், பிலால் சித்திக்கையும் எதிர் எதிரே வைத்துக்கூட காவல்துறை விசாரணை நடத்தியதாக தகவல்கள் வந்தது. இந்நிலையில் தற்போது ராம்குமார் இறந்து விட்டதால் இது குறித்து பிலால் சித்திக்கிடம் சில கேள்விகளை பிரபல தமிழ் வார இதழ் ஒன்று கேட்டது.
அதன் கேள்வி பதில் கீழே:-
கேள்வி: ராம்குமார் உயிரிழந்திருப்பது குறித்து?
பதில்: சிறைத்துறை கவனமாக இருந்திருக்க வேண்டும். காவல் துறை சரியான நிலையில் இந்த வழக்கைக் கொண்டு சென்றார்கள். ஆனால், அது கவனமில்லாமல் நடந்துகொண்டதே ராம்குமார் தற்கொலைக்குக் காரணம். இதனால், இது மீண்டும் மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ளது.
கேள்வி: ராம்குமார் தற்கொலையால் உங்களுக்கு நெருக்கடி உள்ளதா?
பதில்: எந்த பிரச்னையும் இல்லை. இந்த வழக்கு முடியும்வரை காவல் துறையின் தொடர்பில் இருக்க வேண்டும். விட்னஸ் ஒன்றை கொடுத்துள்ளோம். இருப்பினும், விசாரணை மீண்டும் ஆரம்பிக்கும் என்ற கவலை இருக்கிறது. இந்த வழக்கில் முதலில் இருந்து எப்படிச் செயல்பட்டேனோ அவ்வாறே மீண்டும் செயல்படுவேன். ராம்குமார் தற்கொலை செய்துகொண்டது நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.
கேள்வி: உங்களுடைய தோழியைக் கொன்றவர் என்று கூறப்பட்டவர், தற்கொலை செய்துகொண்டதை, நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: ராம்குமார் செய்தது தவறு. அவருக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். கடைசியில் இப்படி நடந்துவிட்டது. விசாரணையைப் பொறுத்தே இனி என்ன நடக்கும் என்பது தெரியும்.
கேள்வி: இது, சரியானா தண்டனையா?
பதில்: தற்கொலை சரியான தண்டனை இல்லை. அவருக்குள் குற்ற உணர்ச்சி இருந்திருக்கலாம். அதனால், அவர் அவ்வாறு செய்திருக்கலாம்.
கேள்வி: இது, தற்கொலை அல்ல... கொலை என்று கூறுகிறார்களே?
பதில்: அதுகுறித்து கருத்துச் சொல்ல விரும்பவில்லை. விசாரணையின் முடிவில்தான் தெரியும்.