வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 19 செப்டம்பர் 2016 (18:32 IST)

மின்சாரம் உடலில் பாய்ந்ததும் அலறிய ராம்குமாரின் மரணம் இப்படித்தான் நடந்தது!

மின்சாரம் உடலில் பாய்ந்ததும் அலறிய ராம்குமாரின் மரணம் இப்படித்தான் நடந்தது!

இளம்பெண் சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று புழல் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


 
 
இந்த மரணம் தற்கொலை அல்ல, கொலை தான் என பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். ஒரு முக்கியமான வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் நபர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சிறைத்துறை பலவீனமடைந்துவிட்டதா என பலரும் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
 
இந்நிலையில் ராம்குமார் இப்படித்தான் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வந்துள்ளது. புழல் சிறையில் விசாரணை கைதி எண் 2-ல் டிஸ்பென்சரி ப்ளாக்கில் ராம்குமார் அடைக்கப்பட்டிருந்தார். இது ஹை அலார்ட் பிளாக்கில் உள்ளது. ராம்குமாருக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
 
செப்டம்பர் 18-ஆம் தேதி மாலை 4 மணி அளவில் சமையலறை பக்கம் தண்ணீர் குடிக்கச் செல்வதாக கூறிய ராம்குமார் அங்கிருந்த சுவிட்ச் பாக்ஸை வாயால் கடித்து உடைத்து, மின் கம்பியை கடித்துள்ளார்.
 
மின்சாரம் உடலில் பாய்ந்ததும் ராம்குமார் அலறியுள்ளார். அப்போது சிறைக்காவல் பேச்சிமுத்து, கையில் இருந்த லத்தியால் அவரைத் தாக்கியுள்ளார். ஆனால் பேச்சிமுத்தும் கீழே விழுந்துவிட்டார்.
 
பின்னர் உயர் அதிகாரிகள் வந்து அப்போது பணியில் இருந்த மருத்துவரிடம் ராம்குமாரை காட்டினர். மருத்துவர் நவீன் அளித்த முதலுதவியை தொடர்ந்து ராம்குமார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
 
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாரை பரிசோதித்த மருத்துவர் சையது அப்துல் காதர் ராம்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இவ்வாறு தான் ராம்குமார் இறந்ததாக சிறைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் சிறையில் 10 அடி உயரத்தில் இருக்கும் கரண்ட் பாக்ஸை ராம்குமார் எப்படி உடைத்து மின்சார கம்பியை உடலில் திணிக்க முடியும் என்ற வலுவான சந்தேகத்தையும் ஏற்கனவே சிறையில் இருந்த சிலர் எழுப்பி வருகின்றனர்.