1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2016 (18:31 IST)

ராம்குமார் மரண எப்ஐஆர் ஜோடிக்கப்பட்டதா?: மருத்துவரின் முரண்பட்ட கருத்து!

ராம்குமார் மரண எப்ஐஆர் ஜோடிக்கப்பட்டதா?: மருத்துவரின் முரண்பட்ட கருத்து!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துகொண்டார் என தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த மரணம் குறித்தான சர்ச்சை இன்னமும் நீடித்து வருகிறது.


 
 
இந்நிலையில் ராம்குமாரின் மரணம் தொடர்பாக, ஜெயிலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், சிறையில் டிஸ்பென்சரி இருக்கும் பகுதியில் உள்ள அறையில்தான் ஜூலை 4-ஆம் தேதி முதல் ராம்குமார் வைக்கப்பட்டிருந்தார். சம்பவம் நடந்த அன்று மாலை 4.30 மணிக்கு குடிக்க தண்ணீர் வேண்டும் என ராம்குமார் கேட்டதால் வார்டன் பேச்சுமுத்து சிறைக்கதவை திறந்துவிட்டுள்ளார்.
 
வெளியேவந்த ராம்குமார், திடீரென்று அருகில் இருந்த சுவிட்ச் பாக்ஸை பலமாக உடைத்து, அதில் இருந்த மின் கம்பியை இழுத்து தனது பற்களால் கடித்தார். அதைப்பார்த்த வார்டன் பேச்சிமுத்து, ஓடிவந்து லத்தியால் அடித்து அவரைக் காப்பாற்ற முயன்றார். பின்னர் ராம்குமார் அப்படியே மயங்கி கீழே விழுந்துவிட்டார்.
 
மின்சார இணைப்பை உடனடியாக துண்டித்த வார்டன் பேச்சுமுத்து சிறைக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து, சிறை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னர், பணியிலிருந்த சிறை மருத்துவர் ராம்குமாருக்கு முதலுதவி கொடுத்துள்ளார்.
 
ராம்குமாரின் நிலை மிக மோசமாக இருந்ததால் அங்கிருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. ராயப்பேட்டையில், ராம்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். என அந்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த முதல் தகவல் அறிக்கையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ராம்குமார் கொண்டு வரப்பட்டார். அங்கு ராம்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
 
ஆனால் பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி சையது அப்துல் காதர் அளித்த தகவலில், ராம்குமார் 4:45 மணிக்கு தற்கொலை செய்துகொண்டதாக ஆம்புலன்ஸில் வந்த மருத்துவர் நவீன் சொன்னார். வரும் வழியில் துடிப்பு இருந்து என்றும், பாதி வழியில்தான் உயிரிழந்தார் என்றும் அவர், என்னிடம் தெரிவித்தார்.
 
அதனால், நாங்கள் சோதித்துப் பார்க்கவில்லை. பின்னர், ரிஜிஸ்டரில் 5.45 மணி என பதிவுசெய்துவிட்டு மார்சுவரிக்கு அனுப்பிவைத்தோம் என கூறியுள்ளார். 
 
இவர் அளித்த தகவலுக்கு முற்றிலும் மாறுபட்டுள்ளது முதல் தகவல் அறிக்கை. இதனால் இந்த முதல் தகவல் அறிக்கை உண்மையானதா என சந்தேகம் எழுகிறது.