இமானுவேல்சேகரன் நினைவு தினம், தேவர் குருபூஜை! – ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு!
ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் பசும்பொன் தேவர் குருபூஜை ஆகியவற்றை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11ம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அடுத்த மாதம் அக்டோபர் 30ம் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா நடைபெற உள்ளது.
இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கையாக இன்று முதல் 2 மாதங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இன்று முதல் செப்டம்பர் 15ம் தேதி வரையிலும், அக்டோபர் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும் வெளிமாவட்டங்களில் இருந்து வாடகை, சரக்கு வாகனங்கள், ட்ராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்த செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அஞ்சலி செலுத்த வர விரும்புகின்றவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்ற பிறகுதான் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.