1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 ஜூன் 2020 (11:32 IST)

3 மணி நேரம் மாஸ்க் மாட்டுறதே பெரிய ரிஸ்க்! – தேர்வை நிறுத்த ராமதாஸ் கோரிக்கை!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்துவதால் மாணவர்கள் உடல்நலத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்வுகளை ஒத்தி வைக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டன. இந்த தேர்வுகள் ஜூன் 15 முதல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தேர்வை ஒத்தி வைக்க கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆளும் அதிமுக கட்சியுடன் கூட்டணியில் உள்ள பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் “கொரோனா ஆபத்து உச்சத்தில் இருக்கும் சூழலில் பொதுத்தேர்வுகளை நடத்துவது ஆபத்தானது மட்டுமின்றி கொடுமையானதும் கூட. தேர்வு மையத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டாலும் கூட, 3 மணி நேரம் தொடர்ச்சியாக முகக்கவசம் அணிவதே பெரும் தண்டனை தான். ஒரு மையத்தில் குறைந்தது 100 மாணவர் தேர்வு எழுதுவதாக வைத்துக் கொண்டாலும் கூட, அவர்கள் அனைவரும் அங்குள்ள ஒற்றைப் பொதுக்கழிப்பறையைத் தான் பயன்படுத்த வேண்டும். அதுவும் 5 நாட்களுக்கு இவ்வாறு செய்வது மட்டுமே கொரோனா பரவுவதற்கு போதுமானது.” என்று கருத்து தெரிவித்துள்ளார். அரசு மாணவர்களின் உயிரோடு விளையாடாமல் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.