வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 13 ஏப்ரல் 2015 (16:47 IST)

லஞ்சம் தராத மருத்துவமனைகளை மிரட்டிய தமிழக அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - ராமதாஸ்

முதல்வரின் காப்பீடு திட்டத்தில், லஞ்சம் தராத மருத்துவமனைகளை மிரட்டிய தமிழக அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
 
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை 650-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் செயல்படுத்தி வரும் நிலையில் அவற்றில் பெரிய அளவிலான மருத்துவமனைகளின்  உரிமையாளர்களை மட்டும் கடந்த 31-ஆம் தேதி சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னைக்கு அழைத்து பேசியுள்ளார். அப்போது, மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்படி  ஒவ்வொரு மருத்துவமனையும் கடந்த 4 ஆண்டுகளில் எவ்வளவு வருவாய் ஈட்டியுள்ளதோ, அதில் 10% அளவுக்கு ஆளுங்கட்சியின் தொலைக்காட்சிக்கு விளம்பரம் தரும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். அதாவது ஒரு தனியார் மருத்துவமனை மருத்துவக் காப்பீட்டுத் திட்டப்படி 4 ஆண்டுகளில் ரூ.10 கோடி வருவாய் ஈட்டியிருந்தால் அது ஆளுங்கட்சியின் தொலைக்காட்சிக்கு ரூ.1 கோடிக்கு விளம்பரம் தர வேண்டும். இதை ஏற்றுக்கொண்ட பல தனியார் மருத்துவமனைகள் ஆளுங்கட்சித் தொலைக்காட்சிக்கு விளம்பரம் கொடுத்து வருகின்றன.
 
அமைச்சரின் அழைப்பை ஏற்று சந்திக்க வராத தனியார் மருத்துவமனைகளை இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக  நியமிக்கப்பட்டுள்ள மூன்றாம் நபர் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளும் விடால் ஹெல்த், எம்.டி. இந்தியா, மெடி அசிஸ்ட் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்டு அமைச்சரின் விருப்பத்தை தெரிவித்து அதை செயல்படுத்தும்படி அழுத்தம் கொடுத்து வருகின்றனர். முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி அதிக அளவில் இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ள அண்டை மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவமனை ரூ.4 கோடிக்கு விளம்பரம் தர வேண்டும் என்று அமைச்சர் தரப்பில் அழுத்தம் தரப்பட்டிருக்கிறது. ஆனால், அதை ஏற்க அம்மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல் தமிழகத்திலுள்ள சில மருத்துவமனைகளும் கையூட்டு தர மறுத்துவிட்டன. இதையடுத்து இம்மருத்துவமனைகளை காப்பீட்டுத் திட்டத்திலிருந்து ஏன் நீக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு மூன்றாம் தரப்பு நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ளும் நிறுவனங்கள் மூலம் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அமைச்சர் விருப்பத்தை நிறைவேற்றாத மருத்துவமனைகளை முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
இதற்கு முடிவு கட்டும் வகையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் நடைபெறும் ஊழல்கள் பற்றி விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும். விசாரணை நியாயமாக நடைபெற வசதியாக இதில் சம்பந்தப்பட்ட விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.