வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 20 ஜூலை 2015 (10:38 IST)

அம்மா சிமெண்ட் விற்பனை குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்: ராமதாஸ்

அம்மா சிமெண்ட் விற்பனை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 
இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
 
அம்மா சிமெண்ட் விற்பனைத் திட்டத்தின்படி இதுவரை ஒரு கோடி சிமெண்ட் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதை ஒரு சாதனையாக காட்டுவதன் மூலம் சிமெண்ட் விற்பனையில் நடந்த முறைகேடுகளை மறைக்க முயல்வதாக தெரிகிறது. 
 
ஜனவரி 10-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் 470 கிட்டங்கிகளின் மூலம் அம்மா சிமெண்ட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் தனியார் சிமெண்ட் நிறுவனங்களிடம் இருந்து 2 லட்சம் டன் சிமெண்ட் கொள்முதல் செய்யப்படும் என்றும், அரசு கிட்டங்கிகளின் மூலம் மூட்டை ரூ.190 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். 
 
அதன்படி பார்த்தால் அம்மா சிமெண்ட் திட்டத்திற்காக இதுவரை 12.5 லட்சம் டன், அதாவது 2.5 கோடி மூட்டை கொள்முதல் செய்யப்பட்டிருக்க வேண்டும். அம்மா சிமெண்ட் விலை குறைவு என்பதால் அவை உடனடியாக விற்பனையாகியிருக்க வேண்டும். ஆனால், கொள்முதல் இலக்கில் 40 சதவீதம் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான காரணம் என்ன என்பதை அரசு விளக்க வேண்டும். 
 
அம்மா சிமெண்ட் கேட்டு விண்ணப்பித்த மக்களில் பலருக்கு டோக்கன் வழங்கப்பட்டிருப்பதாகவும், அவ்வாறு டோக்கன் வழங்கப்பட்ட ஒரு லட்சம் பேர் சிமெண்டுக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழக அரசு அறிவித்தவாறு மாதம் தோறும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து 2 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் சிமெண்ட் மூட்டைகளை வழங்கியிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை என்பதால் தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒப்புக்கொள்ளப்பட்ட அளவில் சிமெண்ட் வாங்கப்படவில்லை. 
 
அம்மா சிமெண்ட் விற்பனை தொடங்கியது முதல் இப்போது வரை 1,33,595 பயனாளிகள் பயன் அடைந்து இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. ஒரு கோடி சிமெண்ட் மூட்டைகள் மூலம் 1.33 லட்சம் பேர் பயனடைந்திருப்பதாக வைத்துக் கொண்டால் ஒவ்வொரு பயனாளிக்கும் சராசரியாக 75 மூட்டை மட்டுமே கிடைத்திருக்கும். 
 
அரசு தெரிவித்துள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், இத்திட்டத்தின்படி எவருக்கும் பயன் கிடைத்திருக்கும் என்று தோன்றவில்லை. சிமெண்ட் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்ற மாயையை ஏற்படுத்தவே அரசு இவ்வாறு செய்வதாக தெரிகிறது. 
 
எனவே, தமிழ்நாட்டில் சிமெண்ட் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அம்மா சிமெண்ட் திட்டத்திற்காக இதுவரை வாங்கப்பட்ட சிமெண்ட் எவ்வளவு?. விற்கப்பட்டது எவ்வளவு?. விண்ணப்பித்த உடனேயே சிமெண்ட் கிடைக்க எப்போது வகை செய்யப்படும் என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் அம்மா சிமெண்ட் விற்பனை குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.