1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 25 மே 2016 (13:47 IST)

'ராஜேஷ் லக்கானி ஊழலுக்கு துணை போய்விட்டார்' - ராமதாஸ் புது குண்டு

தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி ஊழல் செய்யவில்லை. ஆனால் ஊழலுக்கு துணை போய்விட்டார் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து நிருபர்களுக்கு கூறிய ராமதாஸ், ”தமிழகத்தில் ஒரு மாற்று அரசியல் வேண்டும். மாற்றம் வர வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை தீட்டி அன்புமணி மக்களை சந்தித்தார். ஆனால் ஊழல் கூட்டணி அமைத்து அந்த கனவை குலைத்து விட்டனர்.
 
நாங்கள் ஊடகங்களோடு தான் கூட்டணி என்று ஆரம்பித்திலேயே தெரிவித்தோம். ஆனால் கடைசி நேரத்தில் கருத்துக் கணிப்பு என்று பெரும்பாலான ஊடகங்கள் கருத்து திணிப்பு செய்து மக்கள் மனநிலையை மாற்றி விட்டனர்.
 
சுதந்திரமான, நேர்மையான தேர்தல் நடைபெற வில்லை. ஊழல் கட்சிகள் கூட்டணி அமைத்தன. திமுகவும், அதிமுகவும் ஊழல் கட்சிகள். அதோடு தேர்தல் ஆணையமும் இணைந்து கொண்டது.
 
தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி ஊழல் செய்யவில்லை. ஆனால் ஊழலுக்கு துணை போய்விட்டார். கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
 
ரூ. 300 முதல் ரூ. 1000 வரை ஓட்டுகள் விலை கொடுத்து வாங்கப்பட்டன. 2 கட்சிகளும் ரூ. 20 ஆயிரம் கோடி வரை செலவிட்டுள்ளன. ஜனநாயகம் தோற்றுப் போனது என்பதுதான் உண்மை” என்றார்.