வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 15 நவம்பர் 2015 (15:19 IST)

அருந்ததிய மக்களை, வன்னிய சமுதாயத்தினரும், ஆதி திராவிட மக்களும் சேர்ந்து காப்பாற்றியுள்ளனர்: வைகோ

கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடிய அருந்ததிய மக்களை, வன்னிய சமுதாயத்தினரும், ஆதி திராவிட மக்களும் சேர்ந்து காப்பாற்றியுள்ளனர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.


 

 
மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டடோர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை பார்வையிட்டனர். இந்நிலையில் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தெருக்களுக்கும், குடிசைகளுக்கும் நேரடியாகச் சென்று சென்று பார்த்தோம்.
 
பல பட்டதாரிகளின் கல்விச் சான்றிதழ்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. வீடுகளுக்குள் ஐந்து அடி உயரத்திற்குத் தண்ணீரும் சேறும் தேங்கியதில் பொருட்கள் அனைத்தும் நாசமாகி விட்டன.
 
எங்கு பார்த்தாலும் அழுகையும் கண்ணீருமாக இருக்கின்றது. இந்தத் துயரமான சூழலிலும் மனதிற்கு இதம் தரும் செய்தி என்னவெனில், உயிருக்குப் போராடிய அருந்ததிய மக்களை, வன்னிய சமுதாயத்தினரும், ஆதி திராவிட மக்களும் சேர்ந்து காப்பாற்றியுள்ளனர்.
 
மாவட்டம் முழுவதும் இரண்டு லட்சம் ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. நஞ்சை நிலங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வள்ளிக் கிழங்குப் பயிர் அழுகிப் போய்விட்டது. வாழைத் தோப்புகள் சரிந்து கிடக்கின்றன. கரும்புத் தோட்டங்கள், முந்திரி சவுக்கு மரங்களும் சாய்ந்து விட்டன.
 
ஏராளமான பசுக்கள், எருமைகள், காளைகள், ஆடுகள் இறந்துள்ளன. 150 க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகளிலும், வீடுகளிலும் வளர்க்கப்பட்ட இலட்சக்கணக்கான கோழிகள் வெள்ளத்தோடு போய்விட்டன.
 
அரசு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வந்தாலும், பல கிராமங்களில் குடிக்கத் தண்ணீர் இல்லை. மாற்றுத் துணிகள் இல்லை. மண் எண்ணெய் விளக்குகூட இல்லை. இருட்டில் தவிக்கும் வீடுகளுக்குப் பெரிய மெழுகுவர்த்திகள் கொடுக்க வேண்டும்.
 
பல ஊர்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை அதிகாரிகள் கணக்கெடுப்பின்போது முறையாகக் கணக்கு எடுக்கவில்லை. மேலும், அரசுத் தொகுப்பு வீடுகள் வெள்ளத்தால் சேதமாகி இருந்தால் அதற்கு இழப்பீடு கிடையாது என்றும் அதிகாரிகள் சொல்கிறார்களாம். இதுவும் மிகத் தவறானது.
 
வெள்ளத்தால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்ட அரசு முயலக்கூடாது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 43 பேர் உயிர் இழந்துள்ளனர் எனத் தெரிகிறது.
 
தமிழக அரசு உயிர் இழப்புகளை முறையாகக் கணக்கிட வேண்டும்; தலா பத்து இலட்ச ரூபாய் உதவித்  தொகை வழங்க வேண்டும்.
 
விவசாய நிலங்களில் மணல் புகுந்து களிமண்ணாகி பாழாகி விட்டதால், தமிழக அரசின் வேளாண்மைத்துறையின் பொறியியல் பிரிவு அந்த நிலங்களைச் செப்பனிட்டுத் தர வேண்டும்.
 
நெற்பயிருக்கும், வள்ளிக் கிழங்குக்கும் ஏக்கருக்கு ரூ 25,000; கரும்பு வாழை முந்திரி சவுக்கு ஏக்கருக்கு ரூ 1,50,000; மாடுகளுக்கு 50,000; ஆடுகளுக்கு 10,000 கோழிகளுக்கு 500 ரூபாயும் இழப்பு ஈட்டுத் தொகை வழங்க வேண்டும். 
 
மேலும், கடலூர் மாவட்டத்தை இயற்கை பேரிடர் பாதுகாப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.
 
மக்கள் நலக் கூட்டணியின் சார்பில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தாமரைச் செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் செ. மணிவாசகம், மாநிலக்குழு உறுப்பினர் கலியமூர்த்தி ஆகியோர் கடந்த இரண்டு நாள்களாக கடலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.