மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.60 கோடி: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

Suresh| Last Modified புதன், 29 அக்டோபர் 2014 (08:37 IST)
பருவமழை பாதிப்பால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், நிவாரணப் பணிகளை முடுக்கிவிடும் வகையிலும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர் வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
“வடகிழக்குப் பருவமழை காரணமாக, இந்த ஆண்டு இதுவரை 204.5 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பாக பெறும் மழை அளவான 151 மில்லி மீட்டருடன் ஒப்பிடும்போது 35 சதவீதமாகும். தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களில் 28 மாவட்டங்களில் கூடுதலாக மழை பெய்துள்ளது.

பலத்த மழை காரணமாக, மின்சாரம் தாக்கியும், இடி, மின்னல் தாக்கியும், சுவர் இடிந்து விழுந்தும் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டும் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்குப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மேலும் ரூ.1 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பருவமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2.50 லட்சம் வழங்கப்படும்.

பலத்த மழை காரணமாக, சில இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. வெள்ள நீர் வடிந்த பிறகே பயிர்ச் சேதம் குறித்து சரியாக ஆய்வு செய்ய முடியும். எனவே, வெள்ள நீர் வடிந்த பிறகு ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சாலைகளைப் பொறுத்தவரை, பலத்த மழை காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 797 சாலைகளில் 3 ஆயிரத்து 70 இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

அவற்றில், 2 ஆயிரத்து 505 இடங்களில் உள்ள பள்ளங்கள் செப்பனிடப்பட்டுள்ளன. மீதமுள்ள பள்ளங்களை செப்பனிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 765 கிலோமீட்டர் சாலைகள் மழையால் சேதமடைந்துள்ளன. அவற்றை செப்பனிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட சாலைகளைச் செப்பனிடவும், குளம் குட்டைகளைச் சீரமைக்கவும் ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிவரை வடகிழக்குப் பருவமழை நீடிக்க வாய்ப்புள்ளதால், மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து ஆலோசித்து பாதுகாப்பு, மீட்பு, நிவாரணப் பணிகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் அரசு இயந்திரம் தயாராக உள்ளது“ என்று அந்த அறிவிப்பில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும், “பருவமழைக்கு இதுவரை 108 கால்நடைகள் பலியாகியுள்ளன. அதில், மாடுகளை இழந்தவர்களுக்கு ரூ.20 ஆயிரமும், ஆடுகளை இழந்தவர்களுக்கு ரூ.2 ஆயிரமும், கோழிகளை இழந்தோருக்கு ரூ.100 ம் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 250 குடிசை வீடுகள் முழுமையாகவும், 623 வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளன.
முழுவதும் சேதம் அடைந்தவற்றுக்கு ரூ.5 ஆயிரமும், பகுதியாக சேதம் அடைந்தவற்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500ம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும்.

வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு அரிசி, வேட்டி-சேலை, மண்ணெண்ணெய் ஆகிய பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன“ என்று
ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :