பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ராதிகா சரத்குமார்? எந்த தொகுதி தெரியுமா?
வரும் பாராளுமன்ற தேர்தலில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பாஜக கூட்டணியில் இணைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் பாஜக கூட்டணியில் சரத்குமார் இரண்டு தொகுதிகள் கேட்டுள்ளதாகவும் அவை திருநெல்வேலி மற்றும் விருதுநகர் என்றும் கூறப்பட்டு வருகிறது.
பாஜக இரண்டு தொகுதிகளையும் ஒதுக்கினால் திருநெல்வேலியில் சரத்குமார் போட்டியிடுவார் என்றும் விருதுநகரில் அவரது மனைவி ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. இரண்டு தொகுதிகளிலும் நாடார் வாக்குகள் அதிகம் இருப்பதால் இரண்டிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக அவர் பாஜக மேலிடத்திற்கு கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ஆனால் அதே நேரத்தில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட பாஜகவின் நயினார் நாகேந்திரன் திட்டமிட்டுள்ளார் என்பதை அவர் ஏற்கனவே அந்த தொகுதியில் பணிகளை தொடங்கி தேர்தல் வேலைகளை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு திருநெல்வேலி தொகுதி கிடைக்கவில்லை என்றால் விருதுநகர் தொகுதி மட்டும் பெற்று அதில் ராதிகா சரத்குமாரை போட்டியிட வைக்க சரத்குமார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக கூட்டணியில் இணைந்துள்ள சரத்குமாருக்கு இரண்டு தொகுதிகள் கிடைக்குமா? அல்லது ஒரு தொகுதி கிடைக்குமா? என்பது தெரியாவிட்டாலும் ராதிகா சரத்குமார் போட்டியிடுவது மட்டும் கிட்டத்தட்ட உறுதி என்று அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.
Edited by Mahendran