ஆர்.கே.நகரில் பாஜக இத்தனை ஓட்டுகள் வாங்கினால்? - புகழேந்தி சவால்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக மூவாயிரம் ஓட்டுகள் வாங்கி விட்டால் தான் அரசியலில் இருந்தே விலகி விடுவதாக கர்நாடக அதிமுக நிர்வாகி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தல் அனைத்து கட்சியினர் பிரச்சாரத்தால் களை கட்டியுள்ளது. பணப்பட்டுவாடா நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் அங்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே, இந்த முறையும், பணப்பட்டுவாடா நடக்காதவாறு அங்கு பல கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
ஆனாலும், பல்வேறு வகைகளில் அங்கு பணப்பட்டுவாடா நடப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. முக்கியமாக, தினகரன் தரப்பு குக்கர் மற்றும் பணத்தை ஓட்டுக்கு அன்பளிப்பாக கொடுப்பதாக பாஜகவினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி “அதிமுக அமைச்சர்கள் ஊழல் செய்து சம்பாதித்த பணத்தை ஆர்.கே.நகரில் செலவு செய்ய தயாராக உள்ளனர். அந்த பணத்தை கட்சி நிர்வாகிகள் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தலாம். ஆர்.கே.நகரில் தினகரன் தரப்பு குக்கரில் பணம் வைத்து கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டு தவறானது. எங்களுக்கு அந்த அவசியம் இல்லை. ஆர்.கே.நகரில் பாஜக வேட்பாளர் 3 ஆயிரம் ஓட்டுகளை பெற்றுவிட்டால் நான் கட்சியிலிருந்து விலகி விடுகிறேன்” என அவர் தெரிவித்தார்.