திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 6 ஜனவரி 2025 (08:35 IST)

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக புதுச்சேரி பாடல்.. டிஸ்கவரி புக் பேலஸ் விளக்கம்..!

சென்னை புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி பேலஸ் விழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட நிலையில் இந்த நிகழ்ச்சி தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதிலாக புதுச்சேரி தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
ஜனவரி 4ஆம் தேதி அன்று காலை, சென்னை புத்தகக் காட்சியில் புத்தக வெளியீட்டு விழாவிற்காக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை, நூலாசிரியரின் பரிந்துரையின் பேரில், பதிப்பாளர் என்ற முறையில் அழைத்து, அதற்கான அரங்கு அமைத்துக் கொடுத்தோம்.அரசியல் தாக்குதல் மற்றும் அரசுக்கு எதிரான கருத்துகளைப் பேசக்கூடாது என்ற அறிவுறுத்தலுடன், அரசியல் பாரபட்சமற்று பபாசி அமைப்பும் இதற்கான அனுமதியை வழங்கியது.
 
பபாசி அமைப்பின் ஒரு உறுப்பினர் மற்றும் அதன் செயற்குழுவில் செயலாற்றியவன் என்ற முறையில் எனக்குள்ள பொறுப்புடன், சீமான் அவர்களிடமும் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டது.விழா தொடங்கிய அன்று மேடையில் பெரும்பான்மையான திட்டங்களை நூலாசிரியர் பாலமுரளிவர்மன் அவர்கள் பார்த்துக்கொண்டார். 
 
சீமான் அவர்களின் விருப்பத்தின் பேரில் பாரதிதாசன் அவர்களின் 'வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே! மாண்புகழ் நீயே என் தமிழ்த் தாயே! என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது.பாரதிதாசன் பாடல் என்பதால் நானும் அதை இயல்பாக எடுத்துக்கொண்டேன். அது பாண்டிச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து என்றோ. இதன்மூலம் தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுகிறது என்ற அரசியல் தெளிவோ அப்போது இல்லாதது எனது அறியாமையே, அதற்காக நான் வருந்துகிறேன்.
 
அதோடு, சீமான் அவர்கள், நல்லதொரு இலக்கிய மேடையை அரசியல் மேடையாக நினைத்துப் பேசிய கருத்துக்கள் எனக்கோ, எங்களின் பபாசி அமைப்பிற்கோ விருப்பமில்லாதது. நாங்கள் ஒருபோதும் இதை ஆதரிக்கவில்லை. பொது மேடையில் சீமான் அவர்களின் உரையில் குறுக்கிடுவது நாகரிகமாக இருக்காது என்பதால் அனைவரும் அமைதி காத்தோம். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்கிறோம்.
 
 டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் பதிப்பகம், கடந்த 15 ஆண்டுகளாக சென்னையின் இலக்கிய அடையாளங்களில் ஒன்றாக கலைஞர் கருணாநிதி நகரில் செயல்பட்டு வருகிறது. அரசியல் சார்பற்று, வாசிப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, எல்லா வகையான இலக்கியங்களையும் வெளியிட்டு வருகிறோம்.எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவத்திற்கு, தகுந்த ஆலோசனைகள் வழங்காமல், ஒட்டுமொத்தமாக எங்களின் இலக்கியச் செயல்பாடுகளை முடக்குவதற்குத் திட்டமிடுவது வருந்தத்தக்கது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள உறுதி ஏற்றுள்ளோம்.
 
இவ்வாறு அந்த விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Edited by Siva