லிட்டருக்கு 2 ரூபாய் உயர்கிறது பாலின் விலை

Suresh| Last Modified ஞாயிறு, 5 அக்டோபர் 2014 (08:42 IST)
தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய விலை உயர்வு அக்டோபர் 6 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்த ஆண்டில் மட்டும், நான்காவது முறையாக பால் விலையை உயர்த்தப் போவதாக, தனியார் பால் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த பால் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி செய்தியாளர்களிடம் கூறியது:

“ஆந்திரத்தைச் சேர்ந்த திருமலா, டோட்லா, ஹெரிடேஜ், ஜெர்சி ஆகிய 4 தனியார் பால் நிறுவனங்கள் தமிழகத்தில் பால் விநியோகம் செய்து வருகின்றன. இந்த 4 நிறுவனங்களும் இந்த ஆண்டு இதுவரை 3 முறை பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளன.
தற்போது நான்காவது முறையாக திருமலா, ஹெரிடேஜ் ஆகிய இரு தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளன. இந்தப் புதிய விலை உயர்வு திங்கள்கிழமை (அக்.6) முதல் அமலுக்கு வருகிறது.

இந்த நிறுவனங்கள் பால் விலையை உயர்த்துவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்த நிறுவனங்களே தமிழகத்தில் அதிகமாக பால் விநியோகம் செய்து வருகின்றன.
இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்களும் முகவர்களுமே. தமிழக அரசு இந்தப் பிரச்னையில் தலையிட்டு பால் விலை உயர்வைத் திரும்ப பெறச் செய்ய வேண்டும்.

பால் விலை உயர்வை முடிவு செய்ய 4 பேர் கொண்ட குழுவினை அமைக்க வேண்டும். இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரி, பொதுமக்களின் பிரதிநிதி, தனியார் பால் நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதி, பால் முகவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வேண்டும். இவர்கள் முடிவு செய்யும் விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்“ என்றார் பொன்னுசாமி தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 1.50 கோடி லிட்டர் பால் தேவைப்படுகிறது. இதில் 25 லட்சம் லிட்டர் பாலினை தமிழக அரசின் ஆவின் நிறுவனம் வழங்குகிறது. மீதமுள்ள 1.25 கோடி லிட்டர் பால் தேவை தனியார் பால் நிறுவனங்கள் மூலமே நிறைவு செய்யப்படுகிறது.

சென்னையில் நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. இதில் 11.50 லட்சம் லிட்டர் பால் தேவையை ஆவின் நிறுவனம் பூர்த்தி செய்கிறது. மீதமுள்ள 13.50 லட்சம் லிட்டர் பால், தனியார் நிறுவனம் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.
பால் கொள்முதல் விலை, மூலப்பொருள்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றைக் காரணம் காட்டி, தமிழகத்தில் இந்த ஆண்டு ஏற்கெனவே 3 முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :