புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : சனி, 1 ஏப்ரல் 2017 (10:31 IST)

இந்தியாவின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டராக பிரித்திகா யாஷினி...

சேலம் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி, 2015ம் ஆண்டு, தமிழக காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்தார். ஆனால், இவர் திருநங்கை என்ற காரணத்தினால், இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆனால், மனம் தளாராத பிரித்திகா யாஷினி தனக்கு நீதி வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். 


 

 
அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத் தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. அதில் வெற்றியும் பெற்றார். ஆனால், அடுத்து நடந்த உடல் தகுதி தேர்வான ஓட்டப் பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகா யாஷினியை சீருடை பணியாளர் தேர்வாணையம்  தகுதி நீக்கம் செய்தது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டார். திருநங்கை பிரித்திகா யாஷினியை நேர்காணலில் அனுமதிக்க வேண்டும் என தமிழக காவல்துறைக்கு நீதிமன்றம் தலையில் குட்டு வைத்தது. 
 
இதனையடுத்து, இறுதியாக 100 மீ ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து தோல்வியுற்றதாக காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை நீதி மன்றம் பரிசோதனை செய்ய வேண்டும் என திருநங்கை பிரித்திகா யாஷினி கோரிக்கை வைத்தார். இதனால், தவிர்க்க முடியாத இக்கட்டில் சிக்கிய தமிழக காவல்துறை, இனியும் தனது பருப்பு வேகாது என அவரை மீண்டும் 100 மீட்டர் ஓட்டப்பந்தத்தில் ஓடவைத்தது. இதில், அவர் வெற்றி பெற்றார். 


 

 
இந்த நிலையில்,  பிரித்திகா யாசினி வழக்கு நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழு உடல் தகுதி பெற்றுள்ளார். அவருக்கு சட்டப்படி எஸ்.ஐ. பணி வழங்க வேண்டும். அவர் பணியில் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும். மேலும், எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர்களும் தேர்வில் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மாற்றியமைக்க வேண்டும் என்று  உத்தரவிட்டனர். 
 
ஆரம்பம் முதலே திருநங்கை பிரித்திகா யாஷினியை ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, அவரை பணியில் சேர்க்காமல் தமிழக காவல்துறை தவிர்த்து வந்ததது. ஆனால், தனது மனதிடம் காரணமாக, தனக்கு நீதி வேண்டி சென்னை உயர் நீதி மன்றத்தில் முறையிட்டு பணியிக்கு தகுதி பெற்றார் திருநங்கை பிரித்திகா யாசினி. 


 

 
அதன் பின் காவலர் உயர் பயிற்சியகத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கை பிரித்திகா யாஷினி உள்ளிட்ட 1,031 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. சுமர் ஒரு ஆண்டு கால பயிற்சி நிறைவு பெற்று, தற்போது பிரித்திகாவிற்கு தர்மபுரியில் பணி வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டராக பிரித்தியாக யாஷினி ஒரு புதிய வரலாற்றை தொடங்கி வைத்துள்ளார். 
 
அவரை வாழ்த்தி வரவேற்போம்...