வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2016 (13:50 IST)

எங்களை பூட்டி வைத்து விட்டு ராம்குமாரை கொன்று விட்டார்கள் : கைதியின் பகீர் வாக்குமூலம்

எங்களை பூட்டி வைத்து விட்டு ராம்குமாரை கொன்று விட்டார்கள் : கைதியின் பகீர் வாக்குமூலம்

சிறையில் ராம்குமார் மரணம் நிகழ்ந்தது தொடர்பாக, நாளுக்கு நாள் அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.


 

 
சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், கடந்த 18ம் தேதி சிறையில், மின் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
 
ஆனால், அவர் போலீசார் கொலை செய்து விட்டு நாடகம் ஆடுகின்றனர் என்று, ராம்குமாரின் தந்தை, வழக்கறிஞர் ராம்ராஜ் மற்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், ராம்குமரின் மரணம் பற்றி, புழல் சிறையில் இருக்கும் ஒரு கைதி சில அதிர்ச்சி தகவல்களை கூறியதாக பிரபல வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 
 
அவர் அளித்த வாக்குமூலத்தில் “வழக்கமாக, சிறை அதிகாரிகள் எங்களை மாலை 5 மணியிலிருந்து 5.45 மணிக்குள்தான் சிறைக்குள் வைத்து பூட்டுவார்கள். ஆனால் அன்று 3.45 மணிக்கே எங்களை பூட்டி விட்டார்கள். எனவே எதுவோ நடக்கப்போகிறது என்று யூகித்தோம். சரியாக 4.30 மணிக்கு, ராம்குமாரை ஸ்ட்ரெச்சரில் வைத்து சிறைக்குள் இருக்கும் மருத்துவமனைக்கு தள்ளிக்கொண்டு போனார்கள்.
 
சிறிது நேரத்தில், ராம்குமார் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறைக்குள் செய்திகள் பரவியது. அவசர அவசரமாக எங்களை அடைத்து வைத்து விட்டு ராம்குமாரின் கதையை முடித்துவிட்டார்கள்” என்று அந்த சிறைக்கைதி கூறியதாக அந்த வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
மேலும், ராம்குமார் மரணம் அடைந்த நாளிலிருந்து தொடந்து 3 நாட்கள், சிறைக் கைதிகளுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் செய்தி தாள்களும் கொடுக்கப்படவில்லையாம். அதற்கு பின் கொடுக்கப்பட்ட செய்தி தாள்களில், ராம்குமார் பற்றிய செய்திகளை கிழித்து விட்டுதான் அதிகாரிகள் கொடுத்தார்கள் என்று அந்த சிறைக்கைதி கூறியதாக அந்த வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.