சிறையில் சசிகலாவின் அட்டகாசம்: அம்பலப்படுத்திய ஆதாரம்!
சிறையில் சசிகலாவின் அட்டகாசம்: அம்பலப்படுத்திய ஆதாரம்!
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்ட சசிகலா பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சிறை விதிகள் மீறப்பட்டுள்ளது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா சார்பில் அட்டாச் பாத்ரூம், கட்டில், வீட்டு உணவு என சில கோரிக்கைகளை வைத்தனர். ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் அரசியல்வாதியாகிய என்னை சந்திக்க கட்சி தொண்டர்களை அனுமதிக்க வேண்டும் என சசிகலா பிடிவாதமாக உள்ளாராம். சிறைவிதிகளின்படி ஒரு மாதத்துக்கு 2 பார்வையாளர்கள்தான் சசிகலாவை சந்திக்க முடியும்.
ஆனால் இந்த விதிமுறை மீறப்பட்டு சசிகலாவை 31 நாட்களில் 19 பேர் சிறைக்கு சென்று சந்தித்திருக்கிறார்கள். அதில் சசிகலாவின் கணவர் நடராஜன் அடிக்கடி சசிகலாவை சந்தித்துள்ளார். மேலும், வழக்கறிஞர்கள், டிடிவி தினகரன், குடும்ப உறவினர்கள், வளர்மதி, கோகுல இந்திரா போன்ற கட்சி நிர்வாகிகளும் சந்தித்து பேசியுள்ளனர்.
இதனை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் அம்பலப்படுத்தியுள்ளார். சிறை விதிகளை மீறிய சசிகலா மீதும் அதற்கு துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடகா காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார் நரசிம்ம மூர்த்தி. மேலும் சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் கூறியுள்ளார்.