வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 8 ஆகஸ்ட் 2020 (11:19 IST)

கூட்டணி வைத்ததால் தேமுதிகவுக்கு எந்த நன்மையும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த் ஆதங்கம்!

தேர்தல்களில் தேமுதிக கூட்டணி வைத்ததால் தொண்டர்களுக்கோ கட்சிக்கோ எந்த நன்மையும் இல்லை என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தமிழக அரசியலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய காலம் ஒன்று இருந்தது. 60 ஆண்டுகாலம் பாரம்பரியம் கொண்ட திமுகவை எதிர்க்கட்சியாக ஆக கூட வர முடியாமல் 2011 தேர்தலில் 29 தொகுதிகளில் எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் அமர்ந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அக்கட்சி அப்படியே தேக்கம் அடைந்தது. அதன் பிறகு பெரிதாக தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அதன் பின்னர் மக்கள் நலக் கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி என தேர்தல்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் தேமுதிக நிர்வாகிகளோடு வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்திய பிரேமலதா விஜயகாந்த் ‘இதுவரையான தேர்தல்களில் கூட்டணி வைத்துவைத்ததால் கூட்டணி கட்சிகளுக்கு தான் பலன் கிடைக்கிறது. தேமுதிக கட்சிக்கோ அல்லது தேமுதிக தொண்டர்களுக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை. அதனால் இந்த முறை கூட்டணி எப்படி இருந்தாலும் தொண்டர்கள் தயாராக இருக்கவேண்டும்’ என சொல்லியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுதியுள்ளது.