3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சீலிடப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் !
மதுரை மாவட்ட 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீலிடப்பட்டன.
மதுரையில் நேற்று நடைபெற்று முடிந்த அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக சீலிடப்பட்டன.
தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நேற்று அசம்பாவிதங்கள் இன்றி நடைபெற்று முடிந்துள்ளன. அதேபோன்று மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. நேற்று இரவு 8 மணி முதல் அனைத்து வாக்கு எந்திரங்களும் சீல் இடப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் திருமங்கலம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கியங்கள் தனக்கன்குளம் அருகிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சீலிடப்பட்ட அனைத்து வாக்கியங்களும் இரண்டு பாதுகாப்பு அறைகளுக்குள் வைத்து பொதுத் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் அறைகள் பூட்டப்பட்டு சீலிடப்பட்டன. அதற்கு முன்பாக இவ்விரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் காண்பிக்கப்பட்டு அவர்கள் முன்பாகவே பாதுகாப்பு அறை சீல் இடப்பட்டன.
மதுரை மேற்கு, தெற்கு, வடக்கு, மத்திய தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை மருத்துவக்கல்லூரிக்கும், திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிக்கும், மதுரை கிழக்கு, மேலூர் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒத்தக்கடை பகுதியிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை கல்லூரிக்கும் எடுத்துச் செல்லப்பட்டன.
இன்று அந்தந்த பகுதி தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதி ஆகியோர் பார்வையிட வாக்குபெட்டிகள் அனைத்தும் பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்பட்டன. ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டிஎஸ்பி தலைமையில் காவல் ஆய்வாளர்கள் காவலர்கள் 60க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் ஆயுதம் தாங்கிய காவலர்கள் 24 மணி நேரமும் காவல் பணியில் ஈடுபடுவர்.