செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (12:10 IST)

250 பெண்கள்.. 150 ஆண்கள்..! - தொடரும் வேல் சத்ரியனின் சினிமா ஆசை மோசடிகள்!

Vel Sathriyan
சேலத்தில் சமீபத்தில் சினிமா ஆசைக்காட்டி பெண்களை சீரழித்த இயக்குனர் வேல் சத்ரியன் மீது தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது!

சேலம் ஏவிஆர் ரவுண்டானா பகுதியில் சினிமா கம்பெனி ஒன்றில் வேலை பார்த்த பெண் ஒருவர் எடப்பாடியை சேர்ந்த இயக்குனர் வேல்சத்ரியன் என்பவர் ஆபாசமாக படமெடுத்து மிரட்டுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாருக்கு மேலும் பல அதிர்ச்சிக்குரிய சம்பவங்கள் தெரிய வந்துள்ளன. இயக்குனர் வேல்சத்ரியன் என்ற அந்த நபர் சமீபத்தில் தான் எடுக்க உள்ள திரைப்படத்தில் நாயகியாக நடிக்க இளம்பெண் தேவை என சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்துள்ளார்.


அதை நம்பி அவரை தொடர்பு கொண்ட இளம்பெண்கள் சிலரிடம் சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை காட்டி அவர்களை அனுபவித்ததுடன் அதை வீடியோவாகவும் எடுத்து பணம் கேட்டும் மிரட்டியதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக வேல் சத்ரியனையும், அவரது உதவியாளராக இருந்த இளம்பெண் ஒருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து கைப்பற்றிய லேப்டாப் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை ஆராய்ந்ததில் பல பெண்களை ஆபாசமாக படமெடுத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், வேல் சத்ரியனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு வந்து புகாரளித்து வருகின்றனராம்.
Vel Sathriyan

சுமார் 250க்கும் மேற்பட்ட பெண்கள் வேல் சத்ரியனிடம் சிக்கியதாக கூறப்படும் நிலையில் பெண்களோடு வேல் சத்ரியனின் மோசடி வலை நிற்கவில்லை. தொடர்ந்து விசாரணை செய்ததில் வேல் சத்ரியனிடம் சினிமா வாய்ப்பு கேட்டு 150 ஆண்கள், 250 பெண்கள் என 400க்கும் அதிகமானோர் பயோடேட்டா கொடுத்துள்ளனர்.


ஆண்களிடம் படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ரூ.30 ஆயிரம் வரை பணத்தை பெற்று மோசடி செய்துள்ளார் வேல் சத்ரியன். பல லட்சங்கள் வரை வேல் சத்ரியன் மோசடி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் வேல் சத்ரியனையும், அவரது உதவியாளர் பெண்ணையும் காவல்துறை கண்காணிப்பில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.