1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (16:18 IST)

கவிஞர்கள் மதுவால் மரணிப்பதை ஏற்க முடியாது : மனுஷ்யபுத்திரன்

கவிஞரும், சினிமா பாடலாசிரியருமான நா.முத்துகுமார் சமீபத்தில் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார்.


 

 
அவரின் மரணம் குறித்து, அவரின் நெடுநாள் நண்பரான கவிஞர் மனுஷ்யபுத்திரன்  தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
 
“நா.முத்துக்குமாரை கடைசியாக பார்த்துவிட்டு இப்போதுதான் வீட்டிற்கு வந்தேன். வழிநெடுக வெயில் கடுமையாக முகத்தில் இறங்கிக்கொண்டிருந்தது. எந் நேசத்திற்குரிய எவர் இறக்கிற நாளிலும் எங்கிருந்தோ இந்த சாவு வெய்யில் வந்துவிடுகிறது. 
 
முத்துக்குமார் வீட்டில் இருந்துவந்து வெளியே வந்து சாலையில் நின்றுகொண்டிருந்தபோது M.m.Abdulla அருகில் வந்தார். ‘நான் அரசியல்வாதின்ணே..தினம் ஒரு சாவு வீட்டுக்கு போறவன்..சாவு எனக்கு பழகிடுச்சுன்னு நினைச்சுட்டு இருதேன் அண்ணே ..இவன் கலங்கடிச்சுட்டாண்ணே..'' என்று தேம்பி அழுதார்.   
 
நான் பல்லைக் கடித்துக்கொண்டு வெய்யிலையே பார்த்துக்கொண்டிருந்தேன். முத்துக்குமார் எத்தனை விதமான மனிதர்களை தன் வாழ்வில் சம்பாதித்துவைத்திருந்தார் என்பதை இன்றைய முத்துக்குமார் வீட்டைப் பார்த்த போது தெரிந்தது. திரும்பும் வழியில் Shaji Chen என்னை அழைத்தார். ஷாஜியை பத்தாண்டுகளுக்கு முன்பு முத்துக்குமார்தான் என்னிடம் அழைத்து வந்தார். 
 
ஷாஜி ‘அவன் செத்துடான்னு தகவல்வந்ததும் நாம மூணு பேரும் உங்க வீட்ல முதல்ல சந்திச்ச காட்சிதான் நினைவுக்கு வந்தது..அவனை இந்தக் கோலத்தில் வந்து பார்க்க எனக்கு தைரியம் இல்ல சார்..நான் செத்த அன்னைக்கு நீங்களும் என்னை வந்து பார்காதீங்க'' என்றார் . அமெரிக்காவில் இருந்து Rohini Molleti ''இந்த சாவை எப்படி புரிஞ்சுக்கணும்?'' என்று கேட்கிறார் உடைந்த சொற்களில். தெரியவில்லை. இன்றைக்கு வெய்யில் மிகவும் கடுமையாக இருக்கிறது.
 
நம் சாவுக்கு வந்து தோள்கொடுக்க வேண்டியவர்கள் சாவுக்கு நாம் போய் நிற்பதுதான் சோகங்களிலும் துயரமானது. நான் இப்படித்தான் சாக விரும்புகிறேன்.. நான் ஒரு விமான விபத்திலோ அல்லது ஒரு துப்பாக்கி தோட்டாவினாலோ இறக்க விரும்புகிறேன். கவிஞர்கள் குடித்தே சாகிறார்கள் என்ற அவச்சொல்லை இனிமேலும் சகிக்க முடியாது.
 
எனக்கு ஒரு நண்பன். எழுத்தாளன் எங்கோ பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கிறான். நான் குடிக்கமாட்டேன் என்று தெரிந்தும் ஒரு விலை உயர்ந்த மதுபாட்டிலை மெனெக்கெட்டு எனக்கு கொடுத்தனுப்பியிருக்கிறான், இது என்னை கொலை செய்வதற்கான திட்டமிட்ட சதி என்று கருதுகிறேன். இறந்த பல கவிஞர்களின் சாவுக்கும் இவனுக்கும் தொடர்பிருக்கிறதா என தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும்.
 
அகாலத்தில் இறந்த என் நண்பர்கள் பலருக்கும் ஒரு பொதுவான பழக்கம் இருந்திருக்கிறது . அவர்கள் இறப்பதற்கு முந்தைய சில தினங்களில் நிறைய பேசும் பழக்கம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் இயல்புக்கு மாறாய் நிறையப்பேசினார்கள் என்பதை ஈமச்சடங்குகளுக்கு வரும் எல்லோருமே கூறுகிறார்கள். வாழ்வின் வாக்கியங்கள் எப்போதும் சிறியதாகத்தான் இருக்கின்றன. அன்பின் வாக்கியங்கள் அதனிலும் சிறியவை . சாவின் சொற்களுக்கோ சலிப்பே இல்லை.
 
உனக்கெல்லாம் சாவு வராதுடா' இதைச் சொல்கிறபோது அன்பே நீ ஏன் கண்ணீர் சிந்துகிறாய்?
 
என்று ஒரு கவிதையோடு முடித்திருக்கிறார் மனுஷ்யபுத்திரன்.