1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 20 நவம்பர் 2015 (12:49 IST)

பாமக தொழிற்சங்கத்தினர் ஒரு நாள் சம்பளத்தை மழை நிவாரணத்திற்கு வழங்க வேண்டும்: ராமதாஸ்

மழை நிவாரணத்துக்கு பாமக தொழிற்சங்கத்தினர் ஒரு நாள் சம்பளம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
தமிழ்நாட்டில் சென்னை, கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் யூகிக்க முடியாத அளவுக்கு கொடுமையானவை.
 
இயற்கையின் இரக்கமின்மையும், அரசின் அலட்சியமும் தான் அத்தனை துயரங்களுக்கும் காரணம் என்ற போதிலும் பாதிக்கப்பட்ட தமிழ் சொந்தங்களுக்கு உதவி செய்யும் கடமையிலிருந்து நம்மால் ஒருபோதும் ஒதுங்கியிருக்க முடியாது.
 
தமிழகத்தை சுனாமி தாக்கிய போதும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைத் தானே புயல் தாக்கிய போதும் மனிதநேயத்துக்கு உதாரணமாக செயல்பட்டு உதவிகளை வாரி வழங்கியது நாம்தான்.
 
அதேபோல், பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கை கொடுக்க வேண்டியதும் நமது கடமை ஆகும். அக்கடமையை நிறைவேற்றும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாசும், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்களின் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குவார்கள்.
 
அதேபோல், பாட்டாளி தொழிற்சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்கள், மின்வாரியத் தொழிலாளர்கள், கூட்டுறவு சங்கத் தொழிலாளர்கள், தனியார் நிறுவனப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவன பணியாளர்களும் தங்களது ஒரு நாள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும்.
 
இதற்கான ஒப்புதல் கடிதங்களை தொடர்புடைய அமைப்புகளின் நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு இந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.