எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி இலாபம் போதாதா? ஆவேசமாக கேள்வி எழுப்பிய ராமதாஸ்..!
எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி இலாபம் போதாதா? பெட்ரோல், டீசல் விலைகளை முறையே ரூ.13, ரூ.11 குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகியவை 2022-23ஆம் ஆண்டில் வட்டிக்கு முந்தைய லாபமாக ரூ.1 லட்சம் கோடிக்கும் கூடுதலாக ஈட்டியுள்ளன. 2021-22ஆம் ஆண்டில் எண்ணெய் நிறுவனங்களின் வட்டிக்கு முந்தைய லாபம் ரூ.33,000 கோடியாக இருந்த நிலையில் நடப்பாண்டில் லாபம் மூன்று மடங்கிற்கும் கூடுதலாக அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இந்த அளவுக்கு லாபம் அதிகரித்த பிறகும், நடப்பு நிதியாண்டில் கடந்த 4 மாதங்களில் இன்னும் கூடுதல் லாபம் கிடைத்து வரும் போதிலும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்காதது கண்டிக்கத்தக்கது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததைக் காரணம் காட்டி கடந்த 2021-ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டன. 2022-ஆம் ஆண்டு மே மாதம் வரையிலும் இதே நிலை தொடர்ந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் விலை உயர்வை மக்கள் தலையில் சுமத்தினால், அதை அவர்களால் தாங்க முடியாது என்பதால் கடந்த ஆண்டு மே 22-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் உயர்த்தப்படவில்லை. அடுத்த சில மாதங்களில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் கூட, கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்த போது எரிபொருள் விலையை உயர்த்தாததால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை அவை ஈடு செய்வதற்கு வசதியாக விலைகள் குறைக்கப்படவில்லை.
2023-ஆம் நிதியாண்டில் கச்சா எண்ணெய் விலை 30 விழுக்காட்டிற்கும் அதிகமாக குறைந்திருக்கும் போதிலும், அதன் பயன்கள் மக்களுக்கு வழங்கப்படவில்லை. ஜூன் மாத நிலவரப்படி பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு 13 ரூபாயும், டீசல் விற்பனையில் 11 ரூபாயும் எண்ணெய் நிறுவனங்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது. இது எண்ணெய் நிறுவனங்களுக்கு வழக்கமாக கிடைக்கும் லாபத்தை விட கூடுதல் லாபம் ஆகும். இவ்வளவு லாபம் கிடைத்தும் கூட விற்பனை விலைகளை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வராதது நியாயமற்றது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் கடுமையான விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று பெட்ரோல், டீசல் விலைகளின் உயர்வு ஆகும். இன்றியமையாத பொருட்களின் விலைகள் குறைய வேண்டுமானால், பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட வேண்டும். எண்ணெய் நிறுவனங்கள் கடந்த காலங்களில் சந்தித்த இழப்பை ஈடு செய்து விட்ட நிலையில், பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்காமல் இருப்பது மக்களுக்கு இழைக்கப்படும் இரண்டகம் ஆகும். எனவே, இனியும் தாமதிக்காமல் பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு முறையே ரூ.13, ரூ.11 குறைக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்.
Edited by Mahendran