பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழகத்தில் 100% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என தனது பிறந்தநாள் அறிவிப்பில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
சமூகத்தில், மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னிய மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு இணையான அளவு இடப் பங்கீட்டை வென்றெடுத்துக் கொடுத்து வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டும்.
* அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீட்டை பெற்றுத் தர வேண்டும். அதன் மூலம் தமிழகத்தில் 100% இடப் பங்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.
* தமிழ்நாட்டின் நிர்வாகத்தில் அன்னை தமிழுக்கு அரியணை அளிக்கப்பட வேண்டும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.
* தமிழ்நாட்டில் பெய்யும் மழையில் ஒரு சொட்டு நீர் கூட வீணாக கடலில் கலக்காத நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்.
* ஒரு சொட்டு மது கூட இல்லாத அளவுக்கு முழுமையான மதுவிலக்கு ஏற்படுத்தபட வேண்டும்.
* ஒரு புகையிலை கூட இருக்கக்கூடாது. அனைத்து வகை புகையிலைப் பழக்கங்களில் இருந்தும் மக்கள் மீட்கப்பட வேண்டும்.
* கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
* இவை அனைத்தையும் நினைத்த நேரத்தில் சாத்தியமாக்குவதற்காக தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும் என்பன தான் எனது இலக்குகளில் முதன்மையானவை.
இந்த இலக்குகளை இதுவரை முழுமையாக அடைய முடியவில்லை என்றாலும் கூட, அதை நோக்கிய பயணத்தில் பெருந்தொலைவை அடைந்து விட்டோம்.
வன்னியர்கள் உள்ளிட்ட 116 சாதிகளுக்கு 20% இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்திருக்கிறோம்.
அருந்ததியர்களுக்கு 3%, இஸ்லாமியர்களுக்கு 3.5% உள் இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துள்ளோம்.
தேசிய அளவில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்துள்ளோம்.
மருத்துவக் கல்விக்கான அகில இந்திய தொகுப்பில் பட்டியலின மாணவர்களுக்கு 15%, பழங்குடியின மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறோம்.
தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம், தமிழைத் தேடி இயக்கம் ஆகியவற்றின் மூலம் அன்னைத் தமிழைக் காக்க பரப்புரை மேற்கொண்டு வருகிறோம். அதனால் தான் அன்னைத் தமிழ் இன்னும் உயிருடன் இருந்து கொண்டிருக்கிறது.
இயற்கையைக் காக்க இதுவரை 50 லட்சம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம். பல்லாயிரக்கணக்கான ஏரிகளையும், குளங்களையும் தூர்வாரியிருக்கிறோம். தடுப்பணைகளைக் கட்டியிருக்கிறோம்.
இந்த இலக்குகளை இன்னும் சில ஆண்டுகளில் முழுமையாக எட்டிவிடுவோம் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சி என்ற இலக்கை எட்டுவதற்கு இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?
இந்த வினா தான் என்னை வாட்டிக் கொண்டிருக்கிறது.
1989-ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட போது, அடுத்தத் தேர்தலில் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. 1991-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்காவிட்டால், அந்தத் தேர்தலில் குறைந்தது 50 இடங்களில் நாம் வெற்றி பெற்றிருப்போம். அவ்வாறு வென்றிருந்தால், அந்த ஆண்டு நாம் தான் ஆட்சி அமைத்திருப்போம்.
1996-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக அரசியலில் ஆளுங்கட்சிக்கு எதிராக வீசிய அலையையும் மீறி, நான்கு இடங்களில் வென்றோம். 2001-ஆம் ஆண்டில் 20 இடங்கள், 2006-ஆம் ஆண்டில் 18 இடங்கள் என பாட்டாளி மக்கள் கட்சி வெற்றிப்பாதையில் தான் வலம் வந்து கொண்டிருந்தது. ஆனால், அதன் பின் வெற்றிகள் நமக்கு வசமாகவில்லை. 1996-ஆம் ஆண்டில் தனித்து 4 இடங்களை வென்ற நாம் கூட்டணி அமைத்தும் 5 இடங்களில் மட்டும் தான் வெற்றி பெற முடிந்திருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று கண்டறிய வேண்டும்... உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.
2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு எனது 82-ஆவது பிறந்தநாளும், 83-ஆவது பிறந்தநாளும் வலிகள் மற்றும் வேதனைகளுடன் தான் கடந்து சென்றிருக்கின்றன. அப்போதும், எப்போதும் பாட்டாளி சொந்தங்கள் என் மீது காட்டிய பாசம் தான் என்னை வலிகளில் இருந்து மீட்டெடுத்திருக்கிறது. கண்களை இமை காப்பதைப் போன்று பாட்டாளி சொந்தங்கள் தான் என்னை பாதுகாத்து வருகின்றனர்.
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் அதை விட சிறந்த மகிழ்ச்சி இல்லை...
நினைத்ததெல்லாம் நடக்காவிட்டால் அதை நினைத்து முடங்கி விடத் தேவையில்லை.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (குறள் எண்- 619)
என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப வெற்றிகளை சாத்தியமாக்க அனைவரும் கடுமையாக உழைப்போம். அரசியல் இலக்கை அடைவோம் என்று அனைவருக்கும் தெவித்துக் கொள்கிறேன்.
பாட்டாளிகள் இல்லாமல் என் வாழ்க்கை இல்லை, தமிழ்ச்சொந்தங்கள் இல்லாமல் நான் இல்லை. என் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்காக உழைப்பதே எனது விருப்பமும், மகிழ்ச்சியும் ஆகும். இந்த பணியை நான் என்றும் தொடர்வேன் என்று எனது முத்துவிழாவில் நான் அளித்த வாக்குறுதியை மீண்டும் ஒருமுறை தமிழ்ச்சொந்தங்களுக்கு புதுப்பித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Edited by Siva