1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2016 (14:15 IST)

தயவுசெய்து ரசிகர்களை குறை சொல்ல வேண்டாம்: நடிகையின் மனம் திறந்த பேச்சு

ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று சொல்லி, அவர்களின் ரசனையைக் குறை சொல்லி அதற்கேற்ப படம் எடுப்பதாகச் சொல்வது சரியல்ல என்று திரைப்பட நடிகை ரோகிணி கூறினார்.


 

திருப்பூர் டைமண்ட் திரையரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 5வது உலகத் திரைப்பட விழா வெள்ளியன்று தொடங்கியது. இரண்டாவது நாளான சனிக்கிழமை ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நடிகை ரோகிணி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய ரோகினி, ”இது போன்ற உலகத் திரைப்பட விழாக்களைப் பார்த்தபோதுதான் மிகச்சிறந்த திரைப்படங்கள் இருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

மலையாளத் திரை உலகம் மிகச் சிறந்த திரைப்படங்களைக் கொடுத்து வந்தது. அங்கு மோகன்லால், திலகன் போன்ற மிகச்சிறந்த பிறவிக் கலைஞர்கள் இருக்கிறார்கள். மலையாளத் திரைப்படங்கள் மூலமாகத்தான் இயல்பான, உண்மையான நடிப்பை நான் அறிந்து கொண்டேன்.

அங்கு நடித்துவிட்டு தமிழ்ச் சினிமாவுக்கு வந்தால் இதன் தன்மையே வேறு மாதிரி இருந்தது. இங்கு நடிப்பு என்பது உணர்ச்சியைக் கூட்டி, இயல்பு மீறியதாக அதிக சப்தத்துடன் இருக்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்று காட்டினர்.

உலக அளவில் மிகச்சிறந்த திரைப்படங்கள் என்பவை டப்பிங் இல்லாமல், இயல்பான வசனங்கள், இசையுடன் வெளி வருகின்றன. அவைதான் படம் பார்ப்பவர்களுக்கு முழுமையான உணர்வை, கதையின் அழுத்தத்தை உணர்த்தக்கூடியவையாக இருக்கின்றன.

ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று சொல்லி, அவர்களின் ரசனையைக் குறை சொல்லி அதற்கேற்ப படம் எடுப்பதாகச் சொல்வது சரியல்ல. தமிழ்ச் சினிமாவில் அண்மைக் காலமாக காக்கா முட்டை, குற்றம் கடிதல், தங்கமீன்கள் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய நல்ல திரைப்படங்கள் வந்துள்ளன. அவற்றுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பளிக்கின்றனர்.

எனவே ரசிகர்கள் மீது குறை சொல்ல முடியாது. உலக அளவில் சிறந்த திரைப்படங்களைப் பார்க்கும்போதுதான், தமிழகத்தில் ஒருவிதமான ரசனைப் போக்கிற்கு ரசிகர்களை வழிப்படுத்துகிறார்கள் என்பதை உணர முடிகிறது.

அதற்கு மாறாக ரசிகர்களின் இயல்பான ரசனை உணர்வுக்கு ஏற்ற நல்ல திரைப்படங்களைக் கொடுக்க வேண்டும். அதற்கு தமுஎகச போன்ற அமைப்புகள் நடத்தும் உலகத் திரைப்பட விழாக்கள் மிகச்சிறந்த பங்களிப்பைச் செய்து வருகின்றன” என்று தெரிவித்தார்.