முதலமைச்சர் குறித்த தகவலால் பெட்ரோல் பங்குகள் அவசர அவசரமாக மூடல்
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டதை அடுத்து சென்னையில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன.
கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இரண்டு மாத காலங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார்.
முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டதாகவும், அவர் விரும்பும் நேரத்தில் வீட்டுக்கு செல்லலாம் என அப்பல்லோ நிர்வாகம் கூறியது. இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து கடந்த 19ஆம் தேதி அன்று சிறப்பு பொதுப்பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் இன்று மாலை திடீரென அவசர சிகிச்சை பிரவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
இதனையடுத்து சென்னை மாநகராட்சியில் பரபரப்பு நிலவியது. பெரும்பாலான கடைகள் அவசர அவசரமாக மூடப்பட்டன. மேலும், பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன. இதனால், ஒருசில பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.