பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்: வைகோ வலியுறுத்தல்


Suresh| Last Modified திங்கள், 18 ஜனவரி 2016 (14:39 IST)
பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கு முயற்சிக்காமல் கலால் வரியைத் தாறுமாறாக நிர்ணயிப்பது கண்டனத்திற்கு உரியது என்று பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

 


இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத வகையில் 29.70 அமெரிக்க டாலர் என்ற அளவில் வீழ்ச்சி அடைந்துவிட்டது.
 
கச்சா எண்ணெய் விலை சுமார் 5 மடங்கு சரிந்துள்ள நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை 2 மடங்கு அளவுக்காவது குறைத்து இருக்க வேண்டும்.
 
ஆனால், பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கு முயற்சிக்காமல் கலால் வரியைத் தாறுமாறாக நிர்ணயிப்பது கண்டனத்திற்கு உரியதாகும். இதனை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
 
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டு வரும் நிலையில் இதன் பயன் மக்களுக்கு போய்ச் சேராமல், அரசு மட்டுமின்றி தனியார் எண்ணெய் நிறுவனங்களும் கொள்ளை லாபம் அடைகின்றன.
 
இதனால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, மத்திய அரசு மக்கள் மீதான பொருளாதார சுமையைக் குறைக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :