ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு - நாளை பெட்ரோல் பங்க் இயங்காது
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில், நாளை சில மாவட்டங்களில் பெட்ரோல் பங்குகள் இயங்காது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடைபெற அனுமதி வேண்டும். மேலும், பீட்டா நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஏற்கனவே வணிகர் சங்க அமைப்பு நாளை கடை அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதேபோல், நாளை வாடகை கார், ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஆகியவை ஓடாது தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
மேலும், நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, பாட்டாளி தொழிற்சங்கங்களை சேர்ந்த சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது.
இந்நிலையில், கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் பெட்ரோல் பங்குகள் நாளை இயங்காது என தென் ஆற்காடு பெட்ரோல் பங்க் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.