பப்ளிக்கா இப்படி நடந்தது அசிங்கம்! சசிகலா புஷ்பா, திருச்சி சிவா மீது வழக்கு: டெல்லி கமிஷனரிடம் மனு
திமுக எம்.பி. திருச்சி சிவா, மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி ஆணையர் அலுவலகத்தில் வாராகி என்பவர் மனு அளித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவும், சசிகலா புஷ்பா இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும், பின்னர் திருச்சி சிவாவை, சசிகலா புஷ்பா அறைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த வாராகி என்பவர் திருச்சி சிவாவும், சசிகலா புஷ்பா இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி காவல் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
அதில், ”இந்திய மக்கள் மன்றம் என்ற அமைப்பின் தலைவராகவும் மாதமிருமுறை இதழின் ஆசிரியராகவும் நான் இருக்கிறேன். கடந்த ஜூலை 30ஆம் தேதி பிற்பகலில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வந்து செல்லும் பொது இடத்தில் திருச்சி சிவாவும் சசிகலா புஷ்பாவும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் திருச்சி சிவாவை அவரது கன்னத்தில் அறைந்ததாக சசிகலா புஷ்பா ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். சசிகலா புஷ்பா தன்னை கன்னத்தில் அறைந்ததை திருச்சி சிவாவும் ஒப்புக் கொண்டு ஊடகங்களில் பேட்டி அளித்தார்.
மக்கள் பிரதிநிதிகளான இருவரும் பொது இடத்தில் இழிவான முறையில் நடந்து கொண்ட சம்பவம், விமான நிலையப் பாதுகாப்புப் படையினர் முன்னிலையில் நடைபெற்றது. ஆனால், அதிர்ச்சி அளிக்கும் வகையில் அச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் விமான நிலையப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் புகார் பதிவு செய்யவில்லை.
விமான நிலையங்களில் இதுபோல அநாகரிகமாக நடந்து கொள்ளும் நபர்களைப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைப்பதும், காவல் நிலையத்தில் புகார் அளிப்பதும் பாதுகாப்புப் படையினரின் கடமை. ஆனால், உயர் பாதுகாப்பு மிகுந்த விமான நிலையத்தில் இரு எம்.பி.க்கள் வரம்பு மீறி மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தப் புகாரும் பதிவு செய்யப்படாதது பல்வேறு சந்தேகத்தை எழுப்புகிறது.
எனவே, இருவரும் மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக விமான நிலையத்தில் பதிவான சிசிடிவி கேமிரா விடியோ காட்சியைப் பார்வையிட்டு, இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வாராகி குறிப்பிட்டுள்ளார்.