திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By மங்கள மேரி
Last Updated : செவ்வாய், 29 மே 2018 (15:37 IST)

ஸ்டெர்லைட் ஆலையின் இந்த முடிவு நிரந்தரமானதுதானா?

அணில் அகர்வால் என்பவரால் மும்பையில் துவங்கப்பட்ட வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டர்லைட் காப்பர் ஆலை. 1988ல் இருந்து இது பொது நிறுவனமாக இயங்கி வருகிறது, வேதாந்தா குழுமம்



இந்த நிறுவனத்தின் 53.9% பங்குகளை வைத்துள்ளது, அதாவது இந் நிறுவனத்தோட நிர்வாகக் கட்டுப்பாடு வேதாந்தா குழுமத்தினது மட்டுமே. வேதாந்த குழுமம் இந்தியாவில் மட்டும் இல்லாமல் சாம்பியா டாஸ்மானியா நாடுகளிலும் இயங்கி வருகிறது. இது மட்டும் இல்லாம HZL எனப்படும் ஹிந்துஸ்தான் ஜின்க் நிறுவனத்தோட 64.9% பங்கு ஸ்டெர்லைட்
நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் பல நிறுவனங்கள் மூலமாக இந்த வேதாந்தா குழுமம் இயங்கி வருகிறது.




ஸ்டெர்லைட் காப்பர் ஆலை திட்டம் 1993 மஹாராஷ்டிராவில் நிராகரிக்கப்பட்டு 1994ல் தமிழ்நாட்டில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. காலப்போக்கில் இந்த ஆலையில் இருந்து வெளிப்படும் கழிவும், நச்சுக் காற்றும் அந்தப்பகுதியில நீரையும் காற்றையும் பெருமளவு மாசுபடுத்தியதோடு மக்கள் கொடிய நோய்களால் உயிரிழக்க துவங்கினர். மார்ச் 2013 ஆம் ஆண்டு ஆலையில் இருந்து அதிகப்படியான நச்சு வாயு பதிவானது.



தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) மற்றும் TNPCB ஆகியவை, ஸ்டெர்லைட் நிறுவனம் நிலத்தடி நீர், காற்று மற்றும் மண்ணை மாசுபடுத்துவதாக அறிக்கை வெளியிட்டது.1998ல் இருந்து இந்த ஆலைக்கான எதிர்ப்புகள் உள்ளூர் மக்களிடையே தீவிரமடைந்து வந்தாலும் இதுவரை மாறும் அரசியல் அதிகாரிகள் மற்றும் ஆட்சி காரணமாக இந்த ஆலை இன்னும் சட்ட விரோதமா இயங்கிட்டுக் கொண்டுதான் இருந்தது.

2010 ஆம் ஆண்டு, சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகளை மீறியதன் காரணமாக, ஆலையை மூட-- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏப்ரல் மாதத்தில், உச்சநீதிமன்றம்,  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தகர்த்ததுடன், சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதற்காகவும் TNPCB மூலம் அனுமதியை புதுப்பிக்காமல் இயங்குவதற்காகவும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு அபராதம் விதித்தது. ஆட்சி மாறிய பிறகு தேசிய பசுமை தீர்ப்பாயம் மூலம் மீண்டும் ஸ்டெர்லைட்   திறக்கப்பட்டது.

2013 மார்ச் மாதம் மீண்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், எரிவாயுக் கசிவு காரணமாக, உள்ளூர் மக்களிடையே, தோல் எரிச்சல் மற்றும் மரண நோய்கள் ஏற்படுத்தியதற்காகத் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட மீண்டும் உத்தரவிட்டது.

சுற்று சூழல் பாதிக்கபடுவதனால், பெரியவர்கள் உட்பட சிறு குழந்தைகளுக்கும் தீவிர உடல் நோய்கள் ஏற்பட்டதால் இந்த நிறுவனத்த நிரந்தரமா மூடக் கோரி 2015 ல இருந்து பல மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இப்படி பலமுறை சட்டத்தால் மூடப்பட்டும் மீண்டும் திறக்கப்பட்டு இயங்கும் ஸ்டெர்லைட் ஆலை, 2018 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், இரண்டாவது நிறுவனம் அமைப்பதற்கான திட்டத்திற்கு தூத்துகுடி மக்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

சுற்றுச்சூழல் விதிகளை மீறுவதன் அடிப்படையில், தூத்துக்குடி தொழிற்சாலைகளை மூட வேண்டும் என்று மக்கள் போராட துவங்கினர். 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி, ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து, 13 பேர் துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்தனர். பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது கேன்சரின் தலை நகரமாக மாறிவரும் துத்துக்குடியில் பல எதிர்ப்புகளையும் மீறி குமரரெடியாபுரம் என்ற 200 மீ குடியிருப்பு பகுதியில மற்றுமொரு ஆலை துவங்கப்பட இருக்கு. குடியிருப்பு பகுதிகளில் பெரிய ஆலைகள் அமைக்கப்படுவது சட்டத்துக்கு புறம்பானது. அழிவின் விளிம்பில் உள்ள துத்துக்குடியில் இந்த நிலை நீடித்தால் அந்த நகரத்தையே இழக்க கூடிய நிலை உருவாகும் என்பது முக்கிய சுற்று சூழல் ஆர்வலர்களின் கருத்து.



வேதாந்தா குழுமம் தூத்துக்குடியில் மட்டும் இல்லாமல் இந்திய அரசாங்கம் ஒப்புதல் பெற்று பல பகுதிகளில் நிறுவப்பட்டு அங்கு வாழும் மக்களின் அடிப்படை வாழ்வாதரத்தையும் அழித்து வருகிறது. அதில் முக்கியமானது ஒடிசா நியம்கிரி   மலையில் நிறுவப்பட்ட அலுமினியம் ஆலை. அந்த ஆலைய அகற்றக்கோரி அந்தப் பகுதியில் வாழும் திராவிடிய பழங்குடி மக்கள் தூத்துக்குடியில் தற்போது நடப்பது போல் பல போராட்டங்களில் ஈடுபட்டாங்க, இந்த மக்களோட தீவிர போராட்டங்களின் விளைவாக 2013 ஆம் ஆண்டு வீரப்ப மொய்லி தலைமையில் இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 5 ஆயிரம் கோடி வேதாந்தா பாக்ஸைட் சுரங்கத் திட்டத்தை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே பல முறை மூடப்பட்டும் நீதி மன்றம் வாயிலாக ஸ்டெர்லைட் தடைகளை உடைத்து வந்தது. இந்த நிலையில்  தமிழக அரசின் தற்போதைய அறிவிப்பையும் நீதிமன்றம் வாயிலாக உடைக்க வாய்ப்புள்ளது. எனவே ஸ்டெர்லைட்டை  நிரந்தரமாக மூட தமிழக அரசு இதனை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு அறிவித்தால் நீதிமன்றங்கள் இந்த விவகாரத்தில் தலையிடாது என்றும் கூறுகின்றனர். எனவே தமிழக அரசு கொள்கை முடிவாக அறிவிக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.