ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2019 (08:22 IST)

மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் செயற்கை தேர்தல் தேவையா?

ஒரு தொகுதியில் இயற்கையாகவே இடைத்தேர்தல் வந்தால் அதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. ஆனால் செயற்கையாக ஒரு தேர்தல் தேவையில்லாமல் வந்தால் அதனால் ஏற்படும் கோடிக்கணக்கான ரூபாய் செலவால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது.
 
உதாரணமாக நாங்குனேரி தொகுதி எம்.எல்.ஏவான எச்.வசந்தகுமார், கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் நாங்குனேரி தொகுதியில் இடைத்தேர்தல் வரவுள்ளது. இது தேவையில்லாத செயற்கை தேர்தல் தானே! கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் வேறு நபர்களே இல்லையா? இந்த இடைத்தேர்தல் செலவுக்கு யார் காரணம்? 
 
இனிமேல் இதுபோன்ற நிலை வந்தால் அந்த தொகுதி தேர்தலின்போது இரண்டாவது இடத்தை பிடித்தவர் தான் எம்.எல்.ஏ என்று தேர்தல் கமிஷன் அறிவித்தால்தான் இதுபோன்ற நிலைமை மாறும். அல்லது ஏற்கனவே எம்.எல்.ஏ, எம்பியாக இருப்பவர்கள் அவர்களது பதவிக்காலம் முடிவடையும் வரை வேறு தேர்தலில் போட்டியிட கூடாது என்றும் ஒருவேளை போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றால் இடைத்தேர்தலுக்கான மொத்த செலவையும் அவர் ஏற்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் குமுறி வருகின்றனர்.
 
அதேபோல் ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றால் அவர் ராஜினாமா செய்யும் தொகுதியில் இரண்டாவதாக வந்தவர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
 
தேர்தல் கமிஷன் இதுகுறித்து ஆக்கபூர்வமான சட்டத்தை இயற்றாவிட்டால் செயற்கை தேர்தலால் மக்களின் வரிப்பணம் தொடர்ந்து வீணாகி கொண்டே இருக்கும்.