தமிழகத்தை பொறுத்தவரை வரும் மக்களவை தேர்தலையொட்டி கூட்டணி குறித்து பேச்சுவாரத்தை நடைபெற்று வருகிறது. எந்த கட்சி யாருடன் கூட்டணி? கூட்டணியில் எத்தனை இடங்கள் ஒதுக்கீடு? என்ற பரபரப்பில் தமிழக அரசியல் களம் உள்ளது.
அதிமுக பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்ட நிலையில், பாஜக தனது தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அந்தக் கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் இடம் பெறுவார்கள் என தெரிகிறது. மேலும் பல கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
உடல்நல குறைவால் உயிரிழந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தின் போது லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தியதை பார்த்து அரசியல் கட்சிகள் வியப்படைந்தனர். தற்போதும் அவரது நினைவிடத்தில் மக்கள் சாரை சாரையாக வந்து நாள்தோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் தேமுதிக தலைமை அலுவலகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
திரைத்துறை மட்டுமின்றி, மக்களுக்காக விஜயகாந்த் செய்த உதவிகள் பற்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து பிரபலங்களும் பேசி வருகிறார்கள். இதனால் மறைந்த விஜயகாந்த் மீதான மதிப்பும், செல்வாக்கும் மக்களிடையே அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது, வரும் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் தேமுதிகவை மக்கள் ஆதரிப்பார்கள் என்றும் கருத்து நிலவுகிறது.
நீண்ட வருடங்களுக்கு பிறகு தேமுதிக புத்துயிர் பெறத் தொடங்கியிருக்கிறது. மனச்சோர்வில் இருந்த தொண்டர்கள் எல்லாம் இப்போது வீறுகொண்டு கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். கட்சிக்கு உயிர் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் விஜயகாந்த் என்கிறார்கள் அரசியல் விமர்சர்கள். இதனால் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க பாஜக மும்முரம் காட்டி வருகிறது. மறைந்த விஜயகாந்த்திற்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டதும் பாஜகவின் தேர்தல் யுக்தியாகவே பார்க்கப்படுகிறது.
பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இதை அடுத்து அதிமுகவும், தேமுதிக, பாமக உள்ளிட்ட சில கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி ஒரு பக்கம் காய் நகர்த்தி வருகிறார்.
தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க, பாஜகவை போல் அதிமுகவும் தீவிரம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. தேமுதிகவிற்கு தற்போது மவுசு கூடியிருக்கும் நிலையில், கடந்த காலங்களில் எடுத்த குழப்பமான முடிவுகளை போல் இல்லாமல், வரும் காலங்களில் கட்சியின் வளர்ச்சி கருதி, தொண்டர்களின் நலன் கருதி பிரேமலதா சரியான முடிவு எடுத்தால், தேமுதிக மீண்டெழும் என்பதே அரசியல் விமர்சர்களின் கருத்தாக உள்ளது.
திமுகவை பொருத்தவரை கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 11 இடங்கள் ஒதுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் காங்கிரஸ் தரப்பு இந்த முறை 15 சீட்டுகளை வாங்கி விட வேண்டும் என உறுதியாக உள்ளது. அத்தனை சீட்டுகள், காங்கிரசுக்கு திமுக ஒதுக்குமா என்பது சந்தேகம் தான்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 8 தொகுதிகளில் வெற்றி பெற்றன. தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் அதிகரித்து வருவதால், கூடுதலாக ஒரு தொகுதி மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் காங்கிரஸ் எம்பிக்கள் யாரும் தங்கள் தொகுதியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. அதேசமயம் காங்கிரஸ் எம்பிக்கள் இருக்கும் ஒரு சில தொகுதிகளை, திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதனால் திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் என தெரிகிறது.
இது ஒரு பக்கம் இருக்க கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம், திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மூன்று தொகுதிகளை ஒதுக்குமாறு திமுகவிடம் கமலஹாசன் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் கமலுக்கு ஒரு இடம் ஒதுக்க திமுக தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது. எப்படியாவது மூன்று தொகுதிகளை பெற்று விட வேண்டும் என கமலஹாசன் தரப்பில் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மதிமுகவுக்கு ஒரு இடமும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடமும், இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு இடமும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டன.
தற்போது கமலஹாசனுக்கு 3 திமுக தொகுதிகள் ஒதுக்கினால், கூட்டணியில் உள்ள கட்சிகள் கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இதனால் கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதால், கமலுக்கு ஒரு தொகுதிகள் மட்டுமே திமுக ஒதுக்கீடு செய்யும் என தகவல் தெரிவிக்கின்றன. ஒரு தொகுதியை கமல் பெறுவாரா? அல்லது தனித்து போட்டிடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதுவரை தனித்துப் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், வரும் மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவாரா? அல்லது கூட்டணி வைப்பாரா? என்பது குறித்து வருங்காலங்களில் தெரியவரும். தேர்தல் தேதி அறிவித்த பிறகு, கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தை தமிழகத்தில் உச்சகட்ட பரபரப்பை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.