புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 15 ஜூன் 2019 (21:34 IST)

வடிகட்டிய அறியாமையின் உச்சம்: ரஞ்சித்துக்கு பாரிவேந்தர் கண்டனம்

இயக்குனர் பா.ரஞ்சித் கூறிய ராஜராஜ சோழன் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் இதுகுறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி போன்றோர் ரஞ்சித்தின் கருத்தை ஆதரித்து கருத்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள இன்னொரு கட்சியான இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், ரஞ்சித்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
 
தமிழர்களின் ஆட்சி நிர்வாகம் மற்றும் கலை மற்றும் பண்பாட்டின் அடையாளமாகத் திகழ்ந்த ராஜராஜசோழன் தமிழகத்தில் நீர்மேலாண்மையில் முக்கியக் கவனம் செலுத்தியவர். இதனால் விவசாயம் செழித்தோங்கியதோடு மக்கள் அனைவரும் அமைதியான, வளமான வாழ்க்கை முறையை மேற்கொள்ள வழிவகுத்தவர். நாட்டின் எல்லையில் வலிமையான பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்தி, மக்களுக்கு எவ்வித அச்சமும் ஏற்படாமல் அமைதியான சூழ்நிலையை உருவாக்கியவர் ராஜராஜ சோழன்
 
பிறப்பின் அடிப்படையிலான சாதிய பாகுபாடுகளுக்கு முக்கியத்துவம் தராமல், தொழில் சார்ந்த திறமைக்கு முன்னுரிமை வழங்கியவர் ராஜராஜ சோழன். குடிமக்களின் நிலவுடமைச் சமுதாயம் மட்டும் நடைமுறையில் இருந்த காலத்தை தற்போதைய நவீன ஜனநாயக அமைப்புடன் ஒப்பிட்டுப் பேசுவது வடிகட்டிய அறியாமையின் உச்சம். ஜனநாயகப் பார்வை கொண்டிருந்த மாபெரும் தமிழ் மன்னனை தரம் தாழ்ந்து விமர்சிப்பதை தமிழ்ச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது
 
இவ்வாறு பாரிவேந்தர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.