1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 16 ஜனவரி 2024 (11:23 IST)

களைகட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு.! காளைகள் முட்டியதில் 15-க்கும் மேற்பட்டோர் காயம்.!!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
 
உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது. இப்போட்டியில் பங்கேற்க ஆயிரம் காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
 
ஆன்லைன் டோக்கன் பெற்ற மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் போட்டியில் அனுமதிக்கப்பட்டனர். பாலமேடு மஞ்சமலையாற்றில் உள்ள நிரந்தர வாடிவாசலில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
போட்டி தொடங்கியவுடன் முதலில் கிராமத்தின் சார்பில் மரியாதை காளைகள் எனப்படும் 7 கரை காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதை அடுத்து, ஒன்றின் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்படும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கி வருகின்றனர். களத்தில் சீறி பாயும் ஒரு சில காளைகளை அடக்க முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர். 
 
injury
காளைகளை அடக்கி வரும் மாடுபிடி வீரர்களுக்கும், களத்தில் அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள் முதல் பிரிட்ஜ், டிவி, கட்டில், சைக்கிள், அண்டா, கட்டில் உள்ளிட்ட  பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் காளைகள் முட்டியதில் இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில்,  முதல் இடத்தில் சிறப்பாக களம் காணும் காளைக்கு முதல் பரிசாக  ஒரு நிசான் காரும் மற்றும்  மாடுபிடி வீரருக்கு ஒரு நிசான் காரும் வழங்கப்பட உள்ளது. 2ஆவது சிறந்த களம் காணும் காளைக்கு கன்றுடன் கூடிய காங்கேயம் நாட்டு பசுமாடும், 2 ஆம் இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு Apache பைக் பரிசும் வழங்கப்படவுள்ளது.
 
ஜல்லிக்கட்டு முன்னிட்டு  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்க்ரே  பிரவின் உமேஷ் தலைமையில் 1500 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.