சசிகலா அதிகமாக பேசினால்...? - ஓ.பி.எஸ் எச்சரிக்கை...


Murugan| Last Modified வியாழன், 9 பிப்ரவரி 2017 (14:19 IST)
முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படும் சசிகலாவிற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

 

 
நேற்று முன்தினம் இரவு, சென்னை கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அங்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு எதிராக கொடுத்த பேட்டி, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள மோதல்தான் தற்போது தமிழக அரசியல் சூழ்நிலையை பரபரப்பாக வைத்துள்ளது. அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரின் ஆதரவும் தங்களுக்கு இருப்பதாக சசிகலா தரப்பு கூறி வந்தது. ஆனால், அதிலிருந்து 5 பேர் ஏற்கனவே ஓ.பி.எஸ் பக்கம் வந்துவிட்டனர்.  மேலும், சட்டமன்றத்தில் தன்னுடைய பலத்தை நிரூப்பேன் என ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.  
 
இந்நிலையில் அதிரடி திருப்பமாக, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஓ.பி.எஸ்-ஐ அவரது வீட்டிற்கு சென்று தனது ஆதரவை தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “எந்த வித நிர்பந்தமும் இல்லாமல் நான் ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவு தருகிறேன். ஏனெனில், ரவுடிகளின் கூடாரமாக அதிமுக மாறிவிடக் கூடாது என கருதுகிறேன். எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கம்  காக்கப்பட வேண்டும்” என அவர் கூறினார்.
 
அதன்பின் பேசிய ஓ.பி.எஸ் “என் மீது சசிகலா ஆதரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவர் அதிகமாக பேசினால் நானும் பல விஷயங்களை பேச வேண்டி வரும். அவரின் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் நான் பதில் அளிக்கத் தயாராக இருக்கிறேன்.
 
நான் துரோகம் செய்து விட்டதாக சசிகலா கூறுகிறார். ஆனால், உண்மையில், அரசியலுக்கே வர மாட்டேன் என ஜெ.விடம் கொடுத்த மன்னிப்பு கடிதத்தில் கூறிய சசிகலா,  பொதுச்செயலாளர் பதவியை வாங்கியதோடு, முதலமைச்சர் பதவிக்கும் ஆசைப்படுகிறார். அவர்தான் உண்மையான துரோகி.
 
அவைத்தலைவர் மதுசூதனன் வருகை எங்களுக்கு வலிமைய கூட்டியுள்ளது. அவர்தான் அதிமுகவின் நிரந்தர அவைத் தலைவர். ஜெ. வகித்து வந்த போயஸ் கார்டன், நினைவு இல்லமாக மாற்றப்படும்” என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். 


இதில் மேலும் படிக்கவும் :