ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (12:04 IST)

இந்த பக்கம் இந்தி எதிர்ப்பு; அந்த பக்கம் பப்ளிசிட்டி! – மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

தமிழகத்தில் இந்தி திணிப்பு என கண்டனம் தெரிவித்துக் கொண்டு முதல்வர் தன்னை இந்தியில் பிரபலப்படுத்திக் கொள்வதாக ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் “தமிழ் மொழியை வளர்ப்பது என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும், குறிப்பாக பிறமொழி பேசுபவர்களை தமிழ் கற்றுக்கொள்ள வழிவகை செய்வது, உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை தோற்றுவிப்பது போன்றவை ஆகும்” என்று கூறியுள்ளார்.

ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழை வளர்ப்பதற்கு பதிலாக தமிழகத்தில் இந்தி திணிப்பு என்று சொல்லிக்கொண்டே திமுக அறிவிப்புகளை இந்தியில் வெளியிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய தலைவராக பிரபலப்படுத்தி கொள்வதற்காக ஒரு பக்கம் இந்தித் திணிப்பு என்று கூறி தமிழுக்கு போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் இந்தியில் தி.மு.க. தலைவரை விளம்பரப்படுத்துவது என இரட்டை வேடம் போடுகிறது தி.மு.க. தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு அண்ணா கூறிய இருமொழிக் கொள்கையில் ஒன்றான ஆங்கிலத்தை பயன்படுத்துவதற்குப் பதில் ஏன் மும்மொழிக் கொள்கையில் ஒன்றான இந்தியை தி.மு.க. தலைவர் பயன்படுத்துகிறார் என்று மக்கள் கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.