பஸ் எடுக்க ரூ.4½ லட்சம் தேவை: அம்னி பேருந்துங்கள் இயங்குவதில் சிக்கல்!
வருகிற 7 ஆம் தேதி முதல் ஆம்னி பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை என ஆம்னி சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்கு இடையே தொடங்கப்பட்டது.
அதோடு செப்டம்பர் 7 முதல் மாநிலம் முழுவதும் பேருந்துகள் மற்றும் பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் 7 ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், ஆம்னி சங்க பொதுச் செயலாளர் ஆம்னி பேருந்துகள் இயங்காது என கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பஸ்கள் இயக்கப்படவில்லை. எங்களுக்கு பஸ்களை இயக்க வேண்டும் என்ற ஆசைகள் இருந்தும், எங்களால் இயக்கமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
ஏனெனில் ஒரு பஸ்சை இயக்குவதற்கு குறைந்தது ரூ.2 லட்சமும், கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 2 காலாண்டு சாலை வரியாக ரூ.2½ லட்சமும் என மொத்தம் ரூ.4½ லட்சம் தேவைப்படுகிறது.
அதனால் வருகிற 7 ஆம் தேதி முதல் ஆம்னி பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை. எனவே முதல்வர் 2 காலாண்டு சாலை வரியை தள்ளுபடி செய்வதோடு, மேலும் சில கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்திட வேண்டும் என்று கோரியுள்ளார்.