1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 27 ஏப்ரல் 2015 (10:09 IST)

அதிகாரிகள், ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஆளும்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சற்றியுள்ளார்.
 
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான 2 ஆம் கட்ட சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நேற்று நடைபெற்றது.
 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளியில் உள்ள தனது வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் கலந்துகொள்வதற்காக வந்தார்.
 
அப்போது மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 
 
என்னுடைய ஆதார் அட்டை எண் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக படிவத்தை அலுவலகத்தில் தந்து இருக்கிறேன்.
 
இந்த பணியைப் பொறுத்தவரையில் வாக்காளர்களின் பெயர்கள், பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என சரிபார்ப்பது மற்றும் முறைகேடாக இடம்பெற்றுள்ள பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்குவது ஆகிய பணிகள் நடைபெறுகிறது.
 
எங்களுக்கு வரும் செய்திகள் ஆளுங்கட்சியை சேர்ந்த அதிமுக வினர் இதை தவறாக பயன்படுத்துவதாகவும், அதற்கு சில அதிகாரிகள் உதவுவதாகவும் தெரிய வந்துள்ளது. பல பகுதிகளில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் விண்ணப்ப படிவங்கள் வழங்கிவிட்டு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களுக்கு வழங்க மறுக்கிறார்கள். புறக்கணிக்கிறார்கள்.
 
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் வாக்காளர்களும், வாக்குப்பதிவு தினத்தன்று காட்டும் அதே ஆர்வத்தை இப்போதும் காட்டி தங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரிபார்த்து கொள்ள வேண்டும். 
 
திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்கள் பணியில் அவர்கள் இன்னும் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும்.  இவ்வாறு ஸ்டாலின் கூறினார். 
 
மேலும், மேகதாது அணை விவகாரத்தை பொறுத்தவரையில் அனைத்துக் கட்சி தலைவர்களையும், ஒருங்கிணைத்து கொண்டு பிரதமரை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இதையே மற்ற கட்சிகளின் தலைவர்களும் வலியுறுத்துகிறார்கள்.
 
ஆனால், ஏற்கனவே கடிதம் எழுதிவிட்டோம். இப்போது கடிதம் எழுதுகிறோம் என்று முதலமைச்சர் சொல்லும் நிலைதான் இங்கு உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள எல்லா கட்சியினரும் ஒன்றிணைந்து போராடுகிறார்கள். அப்படி ஒருநிலை இங்கு இல்லாதது வேதனையளிக்கிறது. 
 
திமுகஎன்ன முயற்சி எடுத்தாலும் ஆளும் அதிமுக ஒத்துழைப்பு இல்லாமல் தீர்வு வராது. இதற்கு கவர்னரால் முதலமைச்சர் என பதவி பிரமாணம் செய்யப்பட்டவர் என்ற வகையிலாவது ஓ.பன்னீர்செல்வம் உரிய பதிலளிக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.