1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 23 மார்ச் 2018 (15:45 IST)

நம்பர் பிளேட் இல்லாத ரத யாத்திரை வாகனம் : வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?

வி.எ.ச்பி அமைப்பின் ராமராஜ்ய ரதம் கடந்த பிப்ரவரி மாதம் உபி மாநிலத்தில் இருந்து கிளம்பி மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக சமீபத்தில் தமிழகத்திற்கு வந்தது. 


இந்த ரதம் தமிழகத்திற்குள் நுழைய கூடாது என்று திமுக உள்பட பல கட்சிகளின் தலைவர்கள் போராட்டம் நடத்தி கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டனர். சட்டசபையிலும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. நடப்பது அதிமுக ஆட்சியா? இல்லை பாஜக ஆட்சியா? என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.
 
தற்போது அந்த வாகனம் திருநெல்வேலி மாவட்டத்தை சென்றடைந்துள்ளது. இந்நிலையில், அந்த வாகனம் முன்னும், பின்னும் நம்பர் பிளேட் இல்லாமல் இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த விவகாரம் குறித்து கனிமொழி எம்.பி. தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
 
ரத யாத்திரை என்ற பெயரில் தமிழகத்துக்குள் நுழைந்துள்ள வாகனம் கோவில் போன்ற வடிவமைப்புடன் யாத்திரையாக வந்து கொண்டிருக்கிறது. இந்த வாகனம், மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியுள்ளதாக இன்று இந்து நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
 
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, வாகனத்தின் பதிவு எண்கள் முன்னும் பின்னும் பிரதானமாக தென்பட வேண்டும். தயாரிக்கப்பட்ட வாகனத்தில் மாறுதலை செய்ய, தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு மட்டுமே சட்டப்படி அனுமதி உண்டு. கோவில் போல மாறுதல் செய்ய விதிகளில் இடமில்லை. மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 207ன் படி, காவல்துறையினர் இந்த வாகனத்தை உடனடியாக பறிமுதல் செய்திருக்க வேண்டும். பதிவு எண் இல்லாத வாகனம், சட்டத்தின்படி, பதிவு செய்யப்படாத வாகனமாகவே கருதப்பட வேண்டும். இந்த வாகனம் தமிழக எல்லைக்குள் நுழைந்த கணமே பறிமுதல் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
 
ஆனால் பறிமுதல் செய்ய வேண்டிய காவல்துறையினர், இந்த வாகனத்துக்கு பலத்த பாதுகாப்பை வழங்கி, சமூக அமைதியை சீர்குலைக்க துணை போய்க் கொண்டுள்ளனர். 
 
திருச்சியில் ஹெல்மெட் அணியாமல் வந்த குற்றத்துக்காக ஒரு இரு சக்கர வாகனத்தை விரட்டிச் சென்று, ஒரு பெண்ணின் மரணத்துக்குக் காரணமான காவல்துறையினர், சட்டத்தைத் துச்சமாக மதித்து விதிகளை காற்றில் பறக்க விடும் ஒரு வாகனத்துக்கு பாதுகாப்பு அளிப்பது, தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
 
காவல்துறை உடனடியாக தலையிட்டு, விதிகளை மீறியுள்ள ரத வாகனத்தை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும்.
 
என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.