வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 21 ஜூலை 2015 (09:29 IST)

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இது குறித்து தொமுச பொதுச்செயலாளர் ராசவன்னியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
கடந்த 1-1-12 முதல் என்எல்சி நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்து இதுவரை 25 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.
 
அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் 24 சதவீத ஊதிய உயர்வு கோரிக்கை மனு அளித்திருந்தோம். ஆனால், நிர்வாக தரப்பில் 10 சதவீத ஊதிய உயர்வு அளிக்க முடியும் என தொடர்ந்து கூறி காலதாமதப்படுத்தி வருகின்றனர்.
 
கடந்த காலத்தில் என்எல்சி நிறுவனத்திற்கு கிடைத்த நிகர லாபம் தற்போது அதிகரித்துள்ள நிலையிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ள நிலையிலும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் கேட்கிற நியாயமான ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும்.
 
தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திட அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் நிரந்தர தொழிலாளர் தொழிற்சங்க கூட்டமைப்பினரும் இன்று இரவு 10 மணி முதல் (நேற்று) காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
 
மேலும் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள், இன்கோசர்வ் தொழிலாளர்கள், எஸ்.எம்.இ. ஆபரேட்டர்கள் சங்கம் ஆகியோருடன் பேசி, வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு கேட்பது என முடிவு செய்துள்ளோம்.
 
வேலை நிறுத்த போராட்டத்திற்கு என்எல்சி நிர்வாகமே முழு காரணமாகும். எனவே, உடனடியாக அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களை அழைத்து பேசி தீர்வு காண முயற்சிக்க வேண்டும். என்எல்சி தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
 
இந்த வேலை நிறுத்தத்தில் என்எல்சி பொது மருத்துவமனையில் பணிபுரியும் விபத்து சிகிச்சைபிரிவு, அவசர சிகிச்சை பிரிவுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த காலங்களில் ஊதிய மாற்று ஒப்பந்தத்தை இதுபோன்று வேலைநிறுத்தம் நடத்தி தான் வென்றெடுத்துள்ளோம். எனவே தற்போது அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு அனைவரும் ஒற்றுமையுடன் ஆதரவு தரவேண்டும்.
 
கோரிக்கையை வென்றெடுத்த பின், தொழிற்சங்கத்தினர் முறையாக அறிவித்த பின்னர் மீண்டும் பணிக்கு திரும்பலாம். இவ்வாறு அவர் கூறினார்.
 
இதைத் தொடர்ந்து, ஒப்பந்த தொழிலாளர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினருடன், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் சந்தித்து வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு கேட்டனர்.
 
இதையடுத்து, ஒப்பந்த தொழிலாளர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர், வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
 
முன்னதாக மெயின் பஜாரில் நடைபெற்ற நிரந்தர தொழிலாளர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூட்டத்தில், தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிவிப்பை வெளியிட்டனர்.
 
இந்நிலையில், நெய்வேலியில் நேற்று இரவு 10 மணி முதல் தொழிலாளர்கள் பணிக்கு செல்வதை தவிர்த்து வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இவ்வாறு ராசவன்னியன் கூறினார்.
 
என்எல்சியில் சுமார் 12 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்கள், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.