ரெட் அலர்ட்- தேசிய பேரிடர் மீட்புக்குழு தமிழகம் விரைவு
தமிழகத்திற்கு அக்டோபர் 7-ந்தேதி அன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் தேசிய பேரிடர் மீட்புக்குழு தமிழகத்திற்கு வருகை தந்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையளவு வரும் 7-ந்தேதி அன்று அதிகபட்சமாக 25 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் தேவைப்படுமானால் தேசியப் பேரிடர் குழு வரவழைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
நேற்று இரவிலிருந்தே மழையின் அளவு அதிகமாக உள்ளதால் சாலைகளில் தண்ணீர் தேங்க ஆரம்பித்து உள்ளது. இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது தமிழகத்திற்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் வந்துள்ளன. மொத்தமாக 5 குழுக்கள் வந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதிகமழைப் பெய்யும் வாய்ப்புள்ள மாவட்டங்களான நீலகிரி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு தலா ஒரு குழுவும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இரண்டு குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன.