1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 14 அக்டோபர் 2014 (16:02 IST)

பாகிஸ்தான் பிரச்சனையை முதன்முதலில் அரசியல் ஆக்கியவர் மோடி தான் - நாராயணசாமி

பாகிஸ்தான் பிரச்சனையை முதன்முதலில் அரசியல் ஆக்கியவர் நரேந்திர மோடி தான் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் வி.நாராயணசாமி கூறியுள்ளார்.
 
வடகிழக்கில் உள்ள 7 மாநிலங்களின் பொறுப்பாளராகவும், தேசிய பொதுச் செயலாளராகவும் நாராயணசாமியை அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி அண்மையில் நியமித்தார். இந்நிலையில் முதன்முறையாக செவ்வாய்க்கிழமை அவர் புதுவைக்கு வந்தார். நகர எல்லையான கோரிமேட்டில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணி, எதிர்க்கட்சித் தலைவர் வி. வைத்திலிங்கம், பொதுச் செயலர் ஏகேடி ஆறுமுகம், இ.நமச்சிவாயம் எம்.எல்.ஏ.,காரைக்கால் எம்.எல்.ஏ. திருமுருகன், நிர்வாகிகள் பாலாஜி, நீலகங்காதரன், ஐஎன்டியுசி தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா உள்பட பலர் அவரை வரவேற்றனர்.
 
பின்னர் திறந்த ஜீப்பில் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ராஜிவ் காந்தி, காமராஜர் சிலைகளுக்கு நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நேரு வீதி, அண்ணா சாலை வழியாக மாநில கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு பட்டாசு வெடித்து அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 
 
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் ஏற்கெனவே வடகிழக்கு மாநிலங்களின் பொறுப்பாளராக செயல்பட்டேன். சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் என்மீது நம்பிக்கை வைத்து பொதுச் செயலராக நியமித்துள்ளனர். தற்போது காங்கிரஸ் ஆட்சி இல்லாத 3 மாநிலங்களில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் செயல்படுவோம். மஹாராஷ்டிரா, ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு பின்னர் தான் கட்சியில் மாற்றங்கள் செய்ய இருந்தனர். ஆனால் அதற்கு முன்னரே பொதுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளேன். தேர்தல் வாக்குறுதிகளை மறந்த மோடி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த 100 நாள்களில் வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பது, 1 கோடி பேருக்கு வேலை, விலைவாசி உயர்வு கட்டுப்படுத்துவது என மோடி வாக்குறுதிகளை அளித்தார். தற்போது 110 நாள்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. 5 லட்சம் பேருக்கு கூட வேலை தரவில்லை. வெங்காயம், தக்காளி விலை விண்ணை முட்டி நிற்கிறது.
 
மத்தியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தான் பிரச்சனையில் காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்க்கிறது என மோடி தான் பிரசாரம் செய்தார். தற்போது பாகிஸ்தான் தாக்குதலில் 16 பேர் இறந்துள்ளனர். 150 பேர் காயமடைந்தனர். 60 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி இப்பிரச்சனையை அரசியல் ஆக்குவதாக மோடி குறைபடுகிறார். முதன்முதலில் இதை அரசியல் ஆக்கியதே அவர் தான். பல்வேறு பிரச்சனைகளில் அவர் இரட்டை வேடம் போடுகிறார்.
 
மோடியின் அரசால் எந்த திட்டங்களையும் சரிவர நிறைவேற்ற முடியவில்லை. 6 மாதங்களில் அவரது அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அறிந்து கொள்வர். காங்கிரஸ் கட்சி மீண்டும் இழந்த செல்வாக்கை பெறும். காங்கிரஸ் கட்சி மத்தியில் மீண்டும் புதிய பலத்தோடு ஆட்சியை பெறும் என்று நாராயணசாமி கூறினார்.