1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 15 டிசம்பர் 2015 (14:54 IST)

நளினி விடுதலை வழக்கு: தமிழக உள்துறை பதிலளிக்க உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 2ஆம் தேதிக்குள் தமிழக உள்துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 
 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி தாக்கல் செய்த மனுவில், எந்த குற்றம் செய்திருந்தலாலும் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை மனிதாபிமான  அடிப்படையில் விடுதலை செய்யலாம் என்ற தமிழக அரசின் கொள்கை முடிவுப்படி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று அவர் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி தமிழக உள்துறை செயலருக்கு அளித்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தமது மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்
 
இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது போது, இந்த மனு மீது ஜனவரி 2ஆம் தேதிக்குள் தமிழக உள்துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.